ராயபுரம் முதலிடம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கத்திலும் அதிக கொரோனா பாதிப்பு! சென்னை மண்டலவாரியான லிஸ்ட்
சென்னை: தமிழகத்தில் சென்னையில் மிக அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவி வருகிறது என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். ஜூன் 9ம், தேதியான இன்று காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 23 ஆயிரத்து 298 கொரோனா வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
அதில், வடசென்னை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. முதலிடத்தில் இருப்பது ராயபுரம் மண்டலம். இங்கு 4 ஆயிரத்து 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் ஒரே மண்டலத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பால் அவதிப்படுவது இங்குதான். இதற்கு அடுத்த இடத்தில் வடசென்னையின் மற்றொரு மண்டலம் தண்டையார்பேட்டை உள்ளது. இங்கு 3019 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேனாம்பேட்டை, அண்ணா நகர், கோடம்பாக்கம்
பட்டியலில் மூன்றாவது இடம் தேனாம்பேட்டைக்கு. அங்கு 2646 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடம்பாக்கம், திருவிக நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்பை பதிவு செய்துள்ளன.

மணலியில் குறைவான பாதிப்பு
சென்னையை பொறுத்த அளவில் மிகக்குறைந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள மண்டலம் என்றால் அது வடக்கு பகுதியில் உள்ள மணலி. கிட்டத்தட்ட புறநகர்ப் பகுதியான இங்கு 343 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அடுத்ததாக ஆலந்தூர் மண்டலத்தில் 412, பெருங்குடி மண்டலத்தில் 421 பேர், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 420 பேர் என்று, அந்த பட்டியல் நீள்கிறது.

6 அமைச்சர்கள் குழு
சென்னையில் வைரஸ் பாதிப்பை குறைப்பதற்கு 5 அமைச்சர்கள் கொண்ட குழு ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்தது. அந்த அமைச்சர் குழுவில் மாஃபா பாண்டியராஜன் ஆறாவது அமைச்சராக நேற்று முதல் இணைந்துள்ளார். இவர்கள் நகரம் முழுக்க ஆய்வு மற்றும் பிற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பிற மாவட்ட நிலவரம் தெரியவில்லை
சென்னையில் அதிகமாக பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன என்பதால் பாதிப்பு கண்டறியப்படுகிறது. அதே நேரம் தென்மாவட்டங்கள் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் சோதனையின் அளவு குறைவாக இருக்கிறது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications