கடைசி நிமிடத்திலும் தன் நண்பரை காப்பாற்றி உயிரை விட்ட ஆம்ஸ்ட்ராங்.. வெளியான புதிய தகவல்
சென்னை: தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் கடைசி நிமிடத்திலும் அவரது நண்பரின் உயிரை காப்பாற்றி உள்ளாராம். இந்த தகவலை சம்பவ இடத்தில் நேரில் இருந்த அவரது நண்பர் பாலாஜி கூறியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். 52 வயதாகும் இவர் தனது குடும்பத்தினருடன் சென்னை பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் வசித்து வந்தார். அங்கு புதிதாக பெரிய அளவில் வீடு கட்டி வந்தார். இதனால், அவர் தற்காலிகமாக சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். தினமும் இரவு பெரம்பூரில் தான் கட்டும் புதிய வீட்டின் அருகே நண்பர்கள், கட்சிக்காரர்களுடன் பேசிக்கொண்டிருப்பது வழக்கமாம்.

அதுபோல, கடந்த ஜூலை 5ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணியளவில் அவர் அவரது சகோதரர் வீரமணி, நண்பர் பாலாஜி, டிரைவர் அப்துல்கனி ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது 3 இருசக்கர வாகனங்களில் 6 பேர் அங்கு வந்தார்கள். அவர்கள் கையில் பட்டா கத்திகள் இருந்தன. இரு சக்கர வாகனத்தில் இருந்து இறங்கிய அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து தாக்கி உள்ளார்கள்.. தலை, கழுத்து உள்பட பல்வேறு இடங்களில் வெட்டியுள்ளனர்.
இதில் ஆம்ஸ்ட்ராங் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் கீழே சாய்ந்தார். அவருடன் இருந்த அவரது சகோதரர் வீரமணி, நண்பர் பாலாஜி, டிரைவர் அப்துகனி ஆகியோர் கொலையாளிகளை பிடிக்க பார்த்தனர். அப்போது பாலாஜி மற்றும் வீரமணி, அப்துல்கனி ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது. இதனிடையே சத்தம் கேட்டு சுற்றியிருந்த மக்கள் விரைந்து வந்தனர். அதற்குள் பைக்கில் ஏறி 6 பேரும் தப்பி சென்றுவிட்டார்கள்..
இதனிடையே ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆம்ஸ்ட்ராங்கை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர். கொலையாளிகள் 6 பேரும் உணவு வினியோகம் செய்யும் ஊழியர்கள் அணியும் சீருடைகளை அணிந்திருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தேடிய போலீசார், ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடியை சேர்ந்த 39 வயதாகும் பொன்னை பாலு , சந்தோஷ் (22), பெரம்பூர் பொன்னுசாமி நகர் 3-வது தெருவை சேர்ந்த 45 வயதாகும் திருமலை, திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை பகுதியை சேர்ந்த 26 வயதாகும் மணிவண்ணன், குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்த ராமு என்கிற வினோத் (38), அருள் (33), செல்வராஜ் (48) ஆகியோரை தீவிர சோதனை செய்து கைது செய்தனர்.
இதில் பொன்னை பாலு என்பவர் யார் என்றால், கடந்த ஆண்டு சென்னை பட்டினப்பாக்கத்தில் படுகொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி ஆவார். ஆருத்ரா நிறுவனத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை பிரித்து வழங்கிய ஆம்ஸ்ட்ராங்கிற்கு, தனது அண்ணன் கொலை வழக்கில் மறைமுக தொடர்பு இருந்ததாக கருதிய பொன்னை பாலு, பழி தீர்க்க நேரம் பார்த்து காத்திருந்து கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்து கட்டியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதனிடையே கடந்த ஜூலை 5ம் தேதி ஆம்ஸ்ட்ராங்கிற்கு என்ன நடந்தது என்பது குறித்து, சம்பவம் நடந்த போது உடன் இருந்த அவரது நண்பர் பாலாஜி கூறுகையில், வீட்டில் ஜல்லி போட்டிருந்தார்கள். நான் நின்று கொண்டிருந்தேன். ஆம்ஸ்ட்ராங்க் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அங்கிருந்த ஒரு சேரில் உட்கார்ந்தார். திடீரென ஒரு சத்தம் வந்தது. படார் என்று ஒரு சத்தம் வந்தது.. திரும்புவதற்குள்ளாக என்னை முதுகில் தள்ளி கீழே தள்ளிவிட்டார். நான் பள்ளத்தில் கீழே விழுந்துவிட்டேன்..
என் பக்கம் தான் முதலில் வெட்ட வந்தார்கள். அதனை நான் கவனிக்கவில்லை.. என் மீதுவெட்டு விழுந்த உடன் கவனித்த ஆம்ஸ்ட்ராங்க், உடனே என்னை தள்ளிவிட்டு காப்பாற்றினார். எனக்கு பள்ளத்தில் விழுந்ததால் கால் உடைந்துவிட்டது. என்னை காப்பாற்றிவிட்டார். இதுபோல் நண்பர் கிடைப்பது கடினம். அந்த சமயத்திலும் தைரியமான மனிதரை உலகத்தில் பார்க்க முடியாது" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications