அரியர் மாணவர்களுக்கு.. மே 3க்கு பிறகு.. வரப்போகும் அறிவிப்பு என்ன! அதிகாரிகள் தகவல்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் 'அரியர்' மாணவர்களுக்கு ஆல் பாஸ் போட்டதை ஏற்க முடியாது என்று அறிவித்துவிட்டது. இதனால் மீண்டும் அரியர் தேர்வு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் 'அரியர்' மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்த முடிவை, மே, 3 வரை தள்ளிவைக்க, உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், கொரோனா பரவுவதை தடுக்க மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் படிப்படியாக திறக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் அதிகரித்தன் காரணமாக பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் முழுமையாக நடக்கவில்லை. மீண்டும் ஆன்லைனில் நடத்தப்படுகிறது.
நடப்பு கல்வியாண்டில், கல்லுாரி மாணவர்களுக்கு, ஒரு மாதம் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஆன்லைனில் தேர்வுகளும் நடத்தப்படுகிறது. இதனிடையே கடந்த ஆண்டும், கொரோனா தீவிர பரவல் காரணமாக, பெரும்பாலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. கல்லுாரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களை தவிர, மற்ற அனைவருக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டது.

மாணவர்கள் புகழாரம்
அரசின் இந்த உத்தரவால், 30 ஆண்டுகளுக்கு மேலாக, 'அரியர்' வைத்திருந்தவர்களும், தேர்வே எழுதாமல், தேர்ச்சி பெற்றார்கள். இதற்கு கல்வியாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால் மாணவர்கள் தரப்பிலோ அரசுக்கு பிளக்ஸ் பேனர் வரை வைத்து பாராட்டி தள்ளினார்கள். பத்திரிக்கைகளில் முதல் பக்க விளம்பரம் எல்லாம் வந்தது.

உத்தரவு ரத்து
ஆனால் கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களை, 'ஆல் பாஸ்' செய்தது, ஏற்க முடியாது என்று விமர்சித்தார்கள். இது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் , 'அரியர்' மாணவர்களுக்கு ஆல் பாஸ் போட்டதை ஏற்க முடியாது என்று கூறியது. அத்துடுன் 'அரியர் மாணவர் களுக்கு ஏதாவது ஒரு தேர்வு வைக்க வேண்டும். ஆல் பாஸ் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது' என, தீர்ப்பு அளித்தது.

3ம் தேதி வரை தள்ளிவைப்பு
இந்த தீர்ப்பை கேட்டு அரியர் ஆல் பாஸ் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய கல்வி அதிகாரிகளோ. அரியர் தேர்வை நடத்தும் முடிவை, மே, 3 வரை தள்ளி வைக்க, உயர் கல்வி துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிது.

அரியர் தேர்வு
வரும், 15ம் தேதி, மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது, தேர்தல் நடத்தை விதிகளை காரணமாக புதிய அரசு அமைந்த பின், அதிகாரிகளின் ஆலோசனையை பெற்று முடிவெடுக்கலாம் என, உயர் கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள். அரியர் தேர்வு உண்டா இல்லை என்பது மே 2ம்தேதிக்கு பிறகு அமையப்போகும் புதிய அரசின் கையில் தான் உள்ளது.












Click it and Unblock the Notifications