2 மில்லியன் பேருக்கு.. இந்தியாவில் வேலை போகப்போகிறது.. அச்சுறுத்தும் ஏஐ பூதம்.. நிதி ஆயோக் வார்னிங்
சென்னை: செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது, இந்தியாவின் தொழில்நுட்பத் துறையில் சுமார் இரண்டு மில்லியன் வேலை இழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. தற்போது எட்டு மில்லியன் பணியாளர்களைக் கொண்ட இந்தத் துறையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நான்கு மில்லியன் புதிய வேலை வாய்ப்புகளையும் AI உருவாக்கும்.. ஆனால் மூத்த ஊழியர் பலர் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் இதுகுறித்து கூறுகையில், நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால், வேலை இழப்புகள் தவிர்க்க முடியாதது. இந்த இரண்டு மில்லியன் வேலை இழப்புகளை மட்டும் பார்க்க வேண்டாம். இந்த இரண்டு மில்லியன் பேரும் சுமார் 20 முதல் 30 மில்லியன் பிற மக்களை ஆதரிக்கும் ஒரு சூழலியல் அமைப்பிற்குள் இருக்கிறார்கள்.

இவர்களின் வருமானம் பொருளாதாரம் முழுவதும் பரவி, பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவையை உருவாக்கி, பலருக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது. இவர்களுக்கு வேலை போனால்.. அவர்களை நம்பி இருக்கும் எல்லோரும் பாதிக்கப்படுவார்கள், என்று கூறி உள்ளார்.
பலர் வேலை இழக்கும் அபாயம்
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உலகம் தொடர்ந்து ஏற்றுக் கொண்டு வரும் நிலையில், இந்தியர்கள் வேகமாக இதற்கு தயாராக வேண்டும் என்று அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இல்லையென்றால் எதிர்காலத்தில் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படலாம் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
Google.org மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் ஆதரவுடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதில், இந்தியா உலகில் மிக அதிக அளவிலான பணியாளர்களைக் கொண்டிருந்தாலும், இந்தியா அவசரமாக ஏஐ கற்க வேண்டும். பயனுள்ள AI திறன் மேம்பாட்டை இந்தியா தனது ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.
AI தொழில்நுட்பம் 2030 ஆம் ஆண்டுக்குள் ஆசியா-பசிபிக் பிராந்தியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு USD 3 டிரில்லியன் வரை பங்களிக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இதில் சுதாரித்து உடனே ஏஐ கற்றுக்கொள்பவர்களே முன்னேற்றம் அடைவார்கள். வேலையை தக்க வைத்துக்கொள்வார்கள். மற்றவர்கள் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்று ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவின் இளம் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை இந்த ஆற்றலுக்கு முக்கியமாகும். ஆனால் என்னதான் இளைஞர்கள் இருந்தாலும், அவர்கள் ஏஐ கற்கவில்லை என்றால் வேலை இழப்புகளை சந்திக்க நேரிடும் என்று இந்த அறிக்கை எச்சரித்து உள்ளது.
தொடரும் வேலை இழப்புகள்
ஏற்கனவே ஏஐ வருகை காரணமாக 2025 ஆம் ஆண்டில் மட்டும் 1,00,000க்கும் அதிகமான தொழில்நுட்ப வேலைகள் நீக்கப்பட்டுள்ளன. மென்பொருள் பொறியியல் (Software Engineering), மனிதவள மேம்பாடு (Human Resource), துறையில் அதிக வேலை இழப்புகள் ஏற்பட்டு உள்ளதாக ஆய்வு தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence - AI) தாக்கம் அதிகரித்து வருவதால், வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு காலத்தில் புதுமையின் பிறப்பிடமாகவும், நிலையான வேலை வாய்ப்புகளை வழங்கும் துறையாகவும் இருந்த தொழில்நுட்பத் துறை, தற்போது செயற்கை நுண்ணறிவால் பெரும் மாற்றத்தை சந்தித்து வருகிறது. திறமையான நிபுணர்களின் இடத்தை செயற்கை நுண்ணறிவு ஆக்கிரமித்து வருவதால், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்து எதிர்காலம் குறித்த கவலையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications