எங்கள் பக்கம் வாங்க.. மறைமுகமாக அணுகிய திமுகவின் முக்கிய டீம்.. ஜெயக்குமார் எடுத்த முடிவு!
சென்னை: அன்வர் ராஜாவை போல் தங்கள் பக்கம் வருமாறு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பை திமுக அணுகிய போது, அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. என்ன நடந்தாலும் கடைசி வரை அதிமுகவிலேயே தொடர்வேன் என்று கூறியுள்ள ஜெயக்குமார், இந்த தகவலைக் கசியவிட்ட அதிமுக நிர்வாகிகள் மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக அதிமுக அமைப்பு செயலாளர் அன்வர்ராஜா திடீரென திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயத்திற்கு அன்வர்ராஜா வரும் வரை, அவர் திமுகவில் இணையப் போகும் தகவல் அதிமுகவில் யாருக்கும் தெரியவில்லை.

இதன்பின்னரே அவசர அவசரமாக அதிமுகவிலிருந்து அன்வர்ராஜா நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிமுக - பாஜக கூட்டணி குறித்து விமர்சித்திருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே பேசி வந்தார். ஆனால் திடீரென அவர் திமுகவை நோக்கி வந்தது பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஏனென்றால் எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுகவின் முக்கிய முகமாக அன்வர்ராஜா இருந்தார்.
இதன் மூலமாக அதிமுக மீது இஸ்லாமியர்கள் மத்தியில் இருக்கும் நம்பிக்கை போய்விட்டதாகப் பார்க்கப்படுகிறது. இதனிடையே அதிமுகவிலிருந்து இன்னும் சில தலைவர்கள் திமுக பக்கம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த புகழேந்தி இன்னும் பலரும் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வருவார்கள் என்று கூறி இருந்தார்.
அந்தப் பட்டியலில் முதல் பெயராக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பெயர் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. ஏனென்றால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய பின், ஜெயக்குமார் ஆவேசமாக விமர்சித்திருந்தார். ஆனால் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டதில் இருந்து சைலண்ட்டாகிவிட்டார்.
அதிமுகவின் முகமாக எடப்பாடி பழனிசாமியின் குரலாக ஜெயக்குமார் அமைதியானது அக்கட்சி வட்டாரத்திலும் விவாதப் பொருளாக மாறியது. அதுமட்டுமல்லாமல் 25 ஆண்டுகளுக்கு மேலாக ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற ஜெயக்குமார் கடந்த தேர்தலில் தோல்வியடைந்தார். அதற்கு இஸ்லாமியர்களின் ஆதரவு இல்லாததே காரணமாக அமைந்தது.
ராயபுரம் தொகுதிகளில் வெல்ல இஸ்லாமியர்களின் ஆதரவு மிகவும் முக்கியம். இதனால் 2026 சட்டசபைத் தேர்தலில் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியில் இருந்து மயிலாப்பூர் தொகுதிக்கு மாறப்போவதாகக் கூறப்பட்டது. இதனிடையே அதிமுக வட்டாரத்திலேயே ஜெயக்குமார் திமுகவில் இணையப் போவதாகப் பேச்சுகள் எழுந்திருக்கின்றன. இதையறிந்து திமுக தரப்பில் ஒரு டீம் அவரை அணுகி இருக்கிறது.
ஆனால் ஜெயக்குமார் நேரடியாகவே, எம்ஜிஆர், ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவன் நான்.. அதனால் என்ன நடந்தாலும் அதிமுகவிலேயே இருப்பேன் என்று கூறி இருக்கிறார். இந்த விவகாரத்தை திமுக அப்படியே விட்டுவிட்டது. ஆனால் திமுகவில் இருந்து அணுகப்பட்டது அதிமுக வட்டாரத்தில் கசிந்திருக்கிறது. இதனால் அதிமுக நிர்வாகிகள் மீது ஜெயக்குமார் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications