தமிழ்நாட்டில் தான் முதலில் தேர்தல்.. தமிழக வாக்காளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்! முழு டேட்டா
சென்னை: தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வாக்காளர்கள் எண்ணிக்கை, தொகுதிகளின் விவரங்கள், கடந்த தேர்தல் நிலவரம் குறித்து முழுமையாக இங்கு பார்க்கலாம்.
லோக்சபா தேர்தலுக்கான அட்டவணையையும், நான்கு மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையையும் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல்: தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 20ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும், மார்ச் 27-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள், மார்ச் 28-ந் தேதி வேட்புமனு பரிசீலனை, மார்ச் 30-ந் தேதி வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டிற்கு தேர்தல் நடைபெறுவதால் இங்கு பரபரப்பு கூடியுள்ளது. தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக ஆகிய முக்கிய கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பாஜகவும் தனியாக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள வியூகங்கள் அமைத்து வருகின்றன.
தமிழ்நாடு - டேட்டா: தென்னிந்தியாவை பொறுத்தவரை அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலம் தமிழ்நாடு தான். தமிழ்நாட்டில் மொத்தமாக 39 தொகுதிகள் உள்ளன. இதில் 7 தனி தொகுதிகள் மற்றும் 32 தொகுதிகள் பொதுத் தொகுதிகளாக உள்ளன.
மிகப்பெரிய தொகுதி: வாக்காளர்கள் எண்ணிக்கை அடிப்படையில், ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதி தான் தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய மக்களவை தொகுதியாக உள்ளது. மத்திய சென்னை தொகுதி, குறைந்த வாக்காளர்களைக் கொண்ட மக்களவை தொகுதியாக உள்ளது.
தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள்: 6,18,90,034
பெண் வாக்காளர்கள்: 3,14,85,724
ஆண் வாக்காளர்கள்: 3,03,96,330
மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 8,294
மாற்றுத்திறனாளி வாக்காளர்கள்: 4,32,805
18-19 வயது மிக்க முதல் முறை வாக்காளர்கள்: 5,26,205
2019 லோக்சபா தேர்தல் நிலவரம்: 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையிலான ஒரு கூட்டணியும் களமிறங்கின. தேர்தல் முடிவில் எதிர்க்கட்சியாக இருந்த திமுக கூட்டணி 38 தொகுதிகளை கைப்பற்றியது. ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக கூட்டணிக்கு தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி கிடைத்தது.
2019 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பதிவான மொத்த வாக்குகள் 4.22 கோடி. வாக்கு சதவிகிதம் 71.87. 2019 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 52.64 சதவிகிதத்தை கைப்பற்றியது திமுக கூட்டணி. இதில் திமுக மட்டும் பெற்ற வாக்கு சதவிகிதம் 32.76 ஆகும்.
2019ம் ஆண்டில் 18.48 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது அதிமுக. அதிமுக - பாஜக கூட்டணி மொத்தமாக 30 சதவிகித வாக்குகளைப் பெற்றது. இந்நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் தங்கள் பலத்தை நிரூபிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.












Click it and Unblock the Notifications