இது லிஸ்டிலேயே இல்லையே.. நாம் தமிழர் கட்சியில் அதிமுக தொண்டர்கள்? தகிக்கும் தமிழக அரசியல் களம்!
சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் தமிழக அரசியல் களம் பரபரப்புக்கு பஞ்சமின்றி காணப்படுகிறது. கூட்டணி தொடர்பான மறைமுக பேச்சுவார்த்தைகளை அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன.
திமுகவை தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்றால் வலிமையான கூட்டணியை கட்டமைக்க வேண்டும் என காய் நகர்த்தும் அதிமுக தமிழகத்தில் அதற்கான பணிகளை ஆரம்பித்துவிட்டது. பாஜகவுடன் ஒரு பக்கம் மோதல் நடைபெற்றாலும் கூட மற்றொரு பக்கம் கூட்டணிக்குள் புதுக்கட்சிகளை கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

அந்த வகையில் அதிமுக கூட்டணியில் நாம் தமிழர் கட்சி இடம்பெறக் கூடும் என்று கூறப்பட்ட நிலையில் அது பற்றி அரசியல் பார்வையாளர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது;
''அதிமுக கூட்டணியில் நாம் தமிழர் கட்சி இடம்பெற வாய்ப்பே இல்லை. அதிமுக இப்போது ஜாதிக்கட்சியாக பார்க்கப்படுகிறது. அரசியலில் எடப்பாடி பழனிசாமியை சீமான் வீழ்த்தி திமுகவுக்கு அடுத்த இடத்திற்கு வருவார். பாஜகவை நம்பி அதிமுகவும், காங்கிரஸை நம்பி திமுகவும் அரசியல் செய்து வருகிறது. ஆனால் சீமான் யாரை நம்பியும் இல்லாமலேயே தனக்கென தனி வாக்கு சதவீதத்தை வைத்திருக்கிறார்.''
''அதிமுகவில் நிலவும் குழப்பத்தால் அக்கட்சி தொண்டர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வருவார்கள். இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் ஓட்டு எடப்பாடி பழனிசாமிக்கு விழாது. திமுகவுக்கு 80% சிறுபான்மையினர் ஓட்டு செல்கிறது. மீதம் 15% சிறுபான்மையினர் ஓட்டு சீமானுக்கு தான் செல்கிறது. இதனால் திமுகவா, நாம் தமிழரா என்ற நிலை வரும் காலத்தில் உருவாகும்''.

''காங்கிரசும் வேண்டாம், பாஜகவும் வேண்டாம் என அன்று ஜெயலலிதா எடுத்த நிலைப்பாட்டை இன்று சீமான் எடுத்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி பாஜக வேண்டாம் என்று சொல்லமாட்டார். பாஜகவை நிச்சயம் அவர் எதிர்க்கமாட்டார். அப்படியிருக்கும் போது சீமான் எப்படி அதிமுக கூட்டணியில் சேருவார்.'' இவ்வாறு ரவீந்திரன் துரைசாமி தனது கருத்தை பகிர்ந்துகொண்டார்.












Click it and Unblock the Notifications