பெண் நீதிபதிக்கு வந்த போன்.. அடுத்த செகண்டே கமிஷனரிடம் ஓடிய உதவியாளர்.. அதிர்ந்த சென்னை ஹைகோர்ட்
சென்னை: செல்போன் நம்பரை தவறாக பயன்படுத்தியதாக தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து பேசுவதாக, ஹைகோர்ட் பெண் நீதிபதியை மிரட்டிய மர்ம நபரை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னை அம்பத்தூர் விஜயலட்சுமிபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்.. இவர் சென்னை பெருநகர கமிஷனரிடம் புகார் ஒன்றை தந்தார்.. அந்த புகாரில், "நான், உயர் நீதிமன்ற பெண் நீதிபதி ஒருவரிடம் உதவியாளராக பணியாற்றி வருகிறேன். கடந்த 1ம் தேதி நீதிபதியை செல்போனில் தொடர்பு கொண்டு நபர் ஒருவர் பேசினார்.

மும்பை போலீஸ்: அதில், "நான் தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணைய அலுவலகத்தில் இருந்து பேசுகிறேன். நீங்கள் பயன்படுத்தும் செல்போன் எண்ணை தவறாக சட்டவிரோத விளம்பரங்களுக்கு பயன்படுத்தி உள்ளீர்கள். இது தொடர்பாக மும்பை அந்தேரி காவல் நிலையத்தில் உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.
பிறகு இன்னொரு நபர் நீதிபதியை, வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு, "மும்பை அந்தேரி காவல் நிலைய அதிகாரி பேசுகிறேன். உங்களது ஆதார் எண்ணை சொல்லுங்கள்" என்று மிரட்டியுள்ளார்.
மர்ம நபர்கள்: இதைக்கேட்டதும் பெண் நீதிபதி, காவல் நிலையத்தில் கூறிவிட்டு வருகிறேன் என்று பேசியதும், அந்த மர்ம நபர் இணைப்பை துண்டித்துவிட்டார். எனவே பெண் நீதிபதியை ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டு மிரட்டிய மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தன்னுடைய புகாரில் கிருஷ்ணன் கூறியிருந்தார்.
அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அருண் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி பெண் நீதிபதியை தொடர்பு கொண்ட மர்ம நபர்களின் செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன உளைச்சல்: நீதிபதியின் ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களை ஒப்படைக்குமாறு போனில் மர்மநபர் மிரட்டியதால், பெண் நீதிபதி கடும் மன உளைச்சல் அடைந்ததாகவும், இதையடுத்து, அவரது உதவியாளர் கிருஷ்ணன் மூலமாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
சமீப காலமாகவே, கொரியர் மோசடி, சிம்கார்டு மோசடி என்று, ஆன்லைன் மோசடிகள் பெருகியபடியே உள்ளது.. ஒருகாலத்தில் பாமர மக்களை மட்டுமே ஏமாற்றி கொண்டிருந்த மோசடி கும்பல், இன்று படித்தவர்களையும் குறி வைத்து பணமோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்..
குற்ற வழக்குகள்: கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை 1340 சைபர் மோசடி குற்ற வழக்குகள் தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட நிலையில், இப்போது வரை 1600 க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications