ரூ.4 லட்சம் கோடி.. தமிழக பட்ஜெட்டை விஞ்சும் வருமானம்.. ராமர் கோவிலால் என்ன பயன்? விளக்கிய அண்ணாமலை
சென்னை: அயோத்தி ராமர் கோவிலால் என்ன பயன்? என எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் கேள்விகள் எழுப்பி வரும் நிலையில் தமிழக பட்ஜெட்டையே விஞ்சும் அளவுக்கு ஓராண்டில் ரூ.4 லட்சம் கோடி வருமானம் கிடைக்க உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெறும் நோக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‛‛என் மண் என் மக்கள்'' என்ற பெயரில் யாத்திரையை தொடங்கி நடத்தி வருகின்றார். இந்த யாத்திரை இன்று சென்னையில் நடந்தது.

இந்நிலையில் தான் சென்னையில் இன்று நடந்த ‛என் மண் என் மக்கள்' யாத்திரையின் ஒருபகுதியாக நடந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ராமர் கோவில் பற்றி பேசினார். ராமர் கோவிலால் என்ன பயன்? என கேள்வி கேட்ட எதிர்க்கட்சியினருக்கு அவர் புள்ளி விபரங்களை கூறி பதிலடி கொடுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் சில கட்சிகளை சேர்ந்தவர்கள் அயோத்தி ராமர் கோவிலால் நமக்கு என்ன பிரயோஜனம் என கேள்வி கேட்கின்றனர். டிவி விவாதங்களில் இப்படி பேசுகின்றனர். உலகில் கோவில், மசூதி, சர்ச்சுகளுக்கு அனைத்து மக்களும் செல்கின்றனர். இஸ்லாமியர்கள் மசூதிக்கும், கிறிஸ்தவர்கள் சர்ச்சுகளுக்கும், இந்துக்கள் கோவில்களுக்கம் செல்கின்றனர். எல்லா மதத்தினரும் அனைத்து இடங்களுக்கும் செல்கின்றனர்.
சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு நம்முடைய இஸ்லாமிய சொந்தங்கள் தங்களின் ஹஜ் புனித யாத்திரைக்காக ஆண்டுக்கு 2 கோடி பேர் சொல்கின்றனர். இதன்மூலம் சவூதி அரேபியாவுக்கு 12 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கிறது. கிறிஸ்தவ நண்பர்கள் வாடிகனுக்கு போப்பை பார்க்க செல்கின்றனர். கடந்த ஆண்டு 80 லட்சம் பேர் சென்றனர். இதன்மூலம் வாடிகனுக்கு கிடைத்த வருமானம் ரூ.315 மில்லியன் டாலர்.
திருப்பதிக்கு இரண்டரை கோடி பேர் சென்றனர். இதன்மூலம் கடந்த ஆண்டு திருப்பதிக்கு கிடைத்த வருமானம் ரூ.1,200 கோடி. இந்நிலையில் தான் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ரீசர்ஜ் ரிப்போர்ட் ஒன்றை சொல்லி உள்ளது. அதாவது அடுத்த ஆண்டு அயோத்திக்கு 5 கோடி செல்வார்கள் என தெரிவித்துள்ளது. இதன்மூலம் உத்தர பிரதேசத்துக்கு கிடைக்கும் வருமானம் என்பது ரூ.4 லட்சம் கோடி. தமிழக அரசின் பட்ஜெட் என்பது ரூ.3 லட்சம் கோடியாக உள்ள நிலையில் அயோத்தி ராமர் கோவிலால் உத்தர பிரதேசத்துக்கு ரூ.4 லட்சம் கோடி ஓராண்டில் கிடைக்க உள்ளது.
இந்த ரூ.4 லட்சம் கோடி வருமானத்தை ஓட்டல், ஆட்டோ ஓட்டுபவர்கள், பூ விற்கும் அக்காள் ஆகியோர் சேர்ந்து தான் உருவாக்க உள்ளனர். இதன்மூலம் உத்தர பிரதேச அரசுக்கு ரூ.25 கோடி வரி மூலமாக கிடைக்க உள்ளது. தமிழ்நாட்டில் ஏராளமான கோவில்கள் உள்ளன. வேளாங்கண்ணியில் சர்ச் உள்ளது. நாகூர் தர்கா உள்பட பல முக்கிய தர்க்காக்கள் உள்ளன. இவை அனைத்தையும் ஒன்றாக இணைத்தாலே போதும். சாதாரணமாக ரூ.3 லட்சம் கோடியை வருமானமாக தமிழகத்துக்கு கொண்டு வரலாம்'' என்றார்.
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொரடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. 2020ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து பணிகள் வேகமாக நடந்து வந்தன. மொத்தம் 3 அடுக்குகளாக கோவில் கட்ட திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது தரைதளம் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த மாதம் 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
கோவில் கருவறையில் நிறுவப்பட்டு இருந்த 5 வயது நிரம்பிய பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி சடங்குகள் செய்தார். அதன்பிறகு சிலையின் கண் திறக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த மாதம் 23ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.
அயோத்தி ராமர் கோவிலில் தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையும், மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம். மேலும் காலை 6.30, மதியம் 12 மணி, இரவு 7.30 மணிக்கு என 3 வேளை ஆரத்தி நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அயோத்திக்கு பக்தர்கள் படையெடுத்து செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications