எவ்வளவு நேக்கா திருடுறாங்கனு பாருங்க! விபத்து போல ஆக்டிங்.. அடுத்த நொடி ரூ1 லட்சம் செல்போன் திருட்டு
ஹைதராபாத்: இந்த காலத்தில் உதவ செல்லும்போது கூட ஒரு முறைக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும் போல.! ஹைதராபாத்தில் அப்படி ஒரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. விபத்தில் சிக்குவது போல பைக்கில் வந்த ஒருவர் நடித்துள்ளார். ஆனால், இது தெரியாமல் அங்கிருந்த ஒருவர் உதவவே பாக்கெட்டிலிருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக சாலையில் யாராவது விபத்தில் சிக்கினால் ஐயோ பாவம் என்று நாம உதவுவோம். தக்க நேரத்தில் அவர்களை மீட்டால் உயிரை கூட காப்பாற்ற முடியும் என்பதால் பலரும் இதுபோல உதவுவார்கள். ஆனால், அப்படி உதவ செல்வதுமே கூட பெரிய ஆபத்தில் போய் முடியும் போல இருக்கிறது. அப்படியொரு சம்பவம் தான் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.

விழுவது போல ஆக்டிங்
ஹைதராபாத்தின் சரோர்நகர் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் முழு சம்பவமும் பதிவாகியுள்ளது. அதில் இருவர் எவ்வளவு நேக்காக திருடுகிறார்கள் என்பது அப்படியே பதிவாகியுள்ளது. அதாவது பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர், திட்டமிட்டே திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். அதில் ஒருவர் திடீரென பைக்கில் இருந்து கீழே விழுந்தது போல் நடிக்கிறார்.
இதைப் பார்த்து அந்த வழியாக வந்த ஒருவர் மனிதாபிமான அடிப்படையில் உதவுவதற்காக ஓடி வந்துள்ளார். கீழே விழுந்தவரை எழுப்பி, பைக்கை தூக்க உதவி செய்து கொண்டிருந்தார். பைக்கில் விழுக இருந்தவரைத் தாங்கி பிடிப்பதிலேயே அவரது கவனம் இருந்தது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட மற்றொரு நபர், மிகவும் சாதுரியமாக உதவ வந்த இளைஞரின் பாக்கெட்டில் இருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட்போனை திருடியுள்ளார்.
எஸ்கேப்
பின்னர், இருவரும் அதே மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். சில நொடிகளுக்கு பிறகே தனது செல்போன் திருடப்பட்டதைப் பாதிக்கப்பட்டவர் உணர்ந்தார். உடனடியாக பைக்கில் வந்தவரைப் பிடிக்கப் போகவே, அதற்குள் அவர்கள் ராக்கெட் வேகத்தில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து பறந்துவிட்டனர். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட நபர் புகாரளித்துள்ளார்.
CCTV footage from Hyderabad has revealed a clever theft carried out in broad daylight.
— Anshul Saxena (@AskAnshul) July 6, 2026
The footage shows a thief on a motorcycle deliberately staging a fake fall by letting his bike drop onto the road, making it appear as though he had lost control. Seeing this, a passerby… pic.twitter.com/3IGW8A1oTV
போலீசார்
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேக நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவர்கள் தப்பிச் சென்ற ரூட்டில் அல்லது அந்த ஏரியாவில் இதேபோல ஏதேனும் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளதா.. அதில் இவர்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அறிவுறுத்தல்
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு போலீசார் முக்கிய எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். சாலையில் திடீரென விபத்து அல்லது சண்டை போன்ற சம்பவங்கள் நடந்தால், மனிதாபிமானத்துடன் உதவுவது அவசியம் என்றாலும் அதே நேரத்தில் தங்களது பணம், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் மீதும் கவனம் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே இந்த திருட்டு தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. மனிதர்களின் இரக்க உணர்வையும், உதவும் மனப்பான்மையையும் குற்றவாளிகள் தங்களது திருட்டு செயல்களுக்குப் பயன்படுத்தி வருவதை என்னவென்று சொல்வது என்றே நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.














Click it and Unblock the Notifications