பி.எஃப் சந்தாதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! 8.25% வட்டி தொகை வழங்க மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல்
சென்னை: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி சேமிப்பிற்கான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக வழங்க மத்திய நிதியமைச்சகம் அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, நாடு முழுவதும் உள்ள 8 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களின் கணக்குகளில் வட்டிப் பணம் செலுத்தப்பட உள்ளது. எப்போது முதல் தெரியுமா? இதன் மூலம் தொழிலாளர்களுக்கு எவ்வளவு கூடுதல் பணம் கிடைக்கும் தெரியுமா? இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிஎப் கணக்கு
தொழிலாளர்களின் எதிர்கால பாதுகாப்புக்காகவும், ஓய்வூகாலத் தேவைக்காகவும் அவர்களின் மாதச் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடிக்கப்பட்டு, வருங்கால வைப்பு நிதி (EPFO) கணக்கில் சேமித்து வைக்கப்படுகிறது. இந்தச் சேமிப்புத் தொகைக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் வட்டி வழங்கி வருகிறது.
அந்த வகையில், இப்போது முடிவடைந்த நிதியாண்டிற்கான வட்டித் தொகையை தொழிலாளர்களின் கணக்கில் செலுத்துவதற்கு மத்திய நிதியமைச்சகம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்த முறை வட்டி விகிதம் 8.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதம் உயர்வு
கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்த வட்டி விகிதமானது 8.15 சதவீதத்திலிருந்து 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் இந்த புதிய அறிவிப்பின்படி, நாடு முழுவதும் உள்ள 8 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் மற்றும் சந்தாதாரர்கள் நேரடியாகப் பலன் பெறவுள்ளனர். மொத்தம் உள்ள 34 கோடி இ.பி.எஃப்.ஓ கணக்குகளில் இந்த வட்டிப் பணம் வரவு வைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை விரைந்து முடிக்குமாறு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி வரும் ஜூலை 15 அல்லது 16ம் தேதிக்குள் அனைத்து தொழிலாளர்களின் கணக்குகளிலும் வட்டித் தொகை முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
சேமிப்பு, வட்டித்தொகை
இதன் மூலம் தொழிலாளர்களுக்கு எவ்வளவு கூடுதல் பணம் கிடைக்கும் என்பதை எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் சில உதாரணங்கள் விளக்கமாக தரப்பட்டுள்ளன.. ஒரு தொழிலாளரின் பி.எஃப் கணக்கில் இருக்கும் மொத்த சேமிப்பு தொகையின் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான வட்டி கணக்கிடப்படும்.
அதன்படி ஒருவருடைய கணக்கில் 1 லட்சம் ரூபாய் மொத்த சேமிப்பாக இருந்தால், அவருக்கு வட்டித் தொகையாக மட்டும் 8,250 ரூபாய் கணக்கில் சேரும்.
அதேபோல், 2 லட்சம் ரூபாய் சேமிப்பு வைத்திருப்பவர்களுக்கு 16,500 ரூபாயும், 5 லட்சம் ரூபாய் வரை பி.எஃப் கணக்கில் பணம் சேர்த்து வைத்துள்ள தொழிலாளர்களுக்கு வட்டித் தொகையாக மட்டுமே 41,250 ரூபாயும் அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படும்.
வெப்சைட் & எஸ்எம்எஸ்
தொழிலாளர்கள் தங்களின் கடின உழைப்பால் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த பணத்திற்கு, உரிய நேரத்தில் முறையான வட்டித் தொகையை மத்திய அரசு வழங்குவதால் பல தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொகை தொழிலாளர்களின் கணக்கில் ஜூலை மாதத்தின் பாதியில் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் கணக்கில் வட்டிப் பணம் ஏறியுள்ளதா என்பதைத் தொழிலாளர்கள் தங்களின் கைபேசி அல்லது இணையதளம் மூலமாக ஜூலை 16-ஆம் தேதிக்குப் பிறகு சரிபார்த்துக் கொள்ளலாம்.














Click it and Unblock the Notifications