‛‛அமைதியா இருங்க’’.. நானே நாளை சென்னை வருகிறேன்.. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நடுவே மாயாவதி போட்ட பதிவு
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி இன்று சென்னை வருவதாக கூறப்பட்ட நிலையில் அவர் நாளை வருவதாக அறிவித்துள்ளார். இதற்கிடையே தான் சென்னையில் பதற்றம் நிலவி வருகிறது. பல இடங்களில் போராட்டம் நடக்கும் சூழலில் அனைவரும் அமைதியாக, சட்டம் ஒழுங்கை மதித்து நடக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவருக்கு வயது 52. இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். நேற்று மாலையில் அவர் தனது வீட்டின் அருகே, நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று டூவீலர்களில் வந்த மர்மகும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் ஆம்ஸ்ட்ராங் சரிந்து விழுந்து உயிருக்கு போராடினார். இதையடுத்து அவரை அவரது நண்பர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்து நேற்று இரவே சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியினர் மற்றும் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில் தான் வழக்கு தொடர்பாக 8 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் தலைவர்களான எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை கேட்டு மாயாவதியும் அதிர்ச்சியடைந்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் தனது வீட்டின் அருகிலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங், தமிழகத்தில் தலித் மக்களுக்காக வலுவாக குரல் கொடுத்த தலைவர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த குற்றவாளிகளை தமிழக அரசு தண்டிக்க வேண்டும்'' என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தான் இன்று மாயாவதி சென்னை வந்து ஆம்ஸ்ட்ராங்க் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூற உள்ளதாக காலையில் தகவல் வெளியானது. இந்நிலையில் தான் தற்போது மாயாவதி பயணம் தொடர்பாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மாயாவதி இன்று சென்னை வரவில்லை. நாளை அவர் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மாயாவதி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‛‛தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சியின் கடின உழைப்பாளியும், அர்ப்பணிப்புள்ள மாநில கட்சி தலைவருமான ஆம்ஸ்ட்ராங் நேற்று மாலை அவரது சென்னை இல்லத்திற்கு வெளியே கொடூரமான முயைில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு உடனடியாக கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அதோடு மிகவும் சோகமான மற்றும் கவலையளிக்கும் இந்த சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு நாளை காலை சென்னை வந்து ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்தவும், துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும் திட்டமிட்டுள்ளேன். அமைதி காத்து, சட்டம் ஒழுங்கை காக்கும்படி அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications