செங்கல்பட்டில் அரசு மருத்துவமனைக்குள் அதிர்ந்த பாலபாரதி! நடக்க முடியாத மதுராந்தகம் சிறுமியை? கொடுமை
சென்னை: "செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு இதுக்காகவே நாங்கள் சென்றோம்.. அவள் ஒரு மாற்றுத் திறனாளி குழந்தைங்க.. நினைச்சாலே கொடுமையா இருக்கு.. சிங்கம் படை, புலிப்படை என எது வந்தாலும் இங்கே பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பது கிடைக்க போவதில்லை" என கடுங்கோபத்துடன் நம்மிடம் சொல்கிறார் முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி. என்ன நடந்தது மதுராந்தகத்தில்?
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த விவசாயி, தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது 10 வயது மகளுக்கு நடக்க முடியாது. மாற்றுத் திறனாளியான இந்த பெண், அந்தப் பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

மதுராந்தகம் சிறுமி
சம்பவத்தன்று வீட்டில் பெற்றோர் இல்லாதபோது, சிறுமி மட்டும் தனியாக இருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளது.. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, பயத்தில் அலறி சத்தம் போட்டுள்ளார்.. உடனே அந்த கும்பல், மாணவியின் வாயை துணியால் பொத்தி, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.
சிறிது நேரத்தில் பெற்றோர் வந்ததுமே, தனக்கு நடந்த கொடுமையை சொல்லி கதறி அழுதுள்ளார் மாணவி, இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், உடனடியாக மேல்மருவத்தூர் மகளிர் போலீஸில் புகார் தந்தனர்.

நடக்க முடியாத மாணவி
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், மாணவியிடம் விசாரணை நடத்தி, அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.. மேலும் சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடிக்க தனிப்படைகளையும் அமைத்துள்ளனர்.. மாணவியிடம் அத்துமீறியதாக சந்தேகிக்கப்படும் சிலரைப் பிடித்து போலீஸார் விசாரித்தும் வருகிறார்கள்..
சிறுமியின் வாக்குமூலம், மருத்துவப் பரிசோதனை, சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் அருகிலுள்ளவர்களிடம் பெறப்படும் தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது.
இந்த கொடூர சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்தவகையில் கம்யூனிஸ்ட் கட்சியும் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி உள்ளது..

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமியையும் அவரது பெற்றோரையும் சந்தித்து ஆறுதல் சொல்வதற்காக, மதுராந்தகம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் பி. சுகந்தி, கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலபாரதி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் க. ஜெயந்தி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்டச் செயலாளர் எம். வெள்ளி கண்ணன் உள்ளிட்டோர் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்கள்.
போக்சோ மருத்துவ வார்டுக்கு சென்று பார்த்தபோது, அங்கு சிறுமியும் அவரது பெற்றோரும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. உடனே இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோதும், அவர்கள் முறையான தகவல் சொல்லவில்லையாம்..
பாலபாரதி நம்மிடம் சொன்னது இதுதான்
"ஒன் இந்தியா தமிழ்" சார்பாக பாலபாரதியிடமே நாம் இதுகுறித்து கேட்டோம்.. மருத்துவமனையில் சிறுமியையும் அவரது பெற்றோரையும் காணவில்லை என்று சொல்கிறீர்கள். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்து உங்களுக்கு ஏதாவது தகவல் கிடைத்ததா? மருத்துவமனை நிர்வாகத்திடமும் காவல்துறையிடமும் நீங்கள் நேரடியாக என்ன விளக்கம் கேட்டீர்கள்? அதற்கு அவர்கள் என்ன பதில் அளித்தார்கள்? இது இடைத்தேர்தல் நேரம் என்பதால், சிறுமியின் குடும்பத்துக்கு அரசியல் ஏதாவது அழுத்தம் இருக்கிறதா என்று நீங்கள் கருதுகிறீர்களா? என்றெல்லாம் நம்முடைய கேள்விகளை முன்வைத்தோம்.
அதற்கு பாலபாரதி சொல்லும்போது, "போக்சோ வழக்கு என்பதால் சிறுமியை நேரில் சந்திக்க முடியாவிட்டாலும், பெற்றோரிடம் நலம் விசாரித்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளவே வந்தோம். மருத்துவமனைக்குள் எங்களை உள்ளேயே விடவில்லை.. பெற்றோரையாவது பார்க்கிறோம் என்றோம்.. அதற்கும் பதில் இல்லை.. இதுகுறித்து கேட்டதற்கு மருத்துவத்துறை அதிகாரிகளோ, காவல்துறையினரோ உரிய பதில் அளிக்கவில்லை..
சிறுமி எங்கே? பெற்றோர் எங்கே?
சிறுமி சிகிச்சை பெற்றதாக சொல்லப்பட்ட போக்சோ வார்டிலும் யாரும் இல்லை.. சிறுமி தன்னுடைய கிராமத்திற்கும் சென்றதாக தெரியவில்லை.. ஏனென்றால் சிறுமியின் உறவினர்களே எங்களுடன்தான் இருந்தனர்.. எத்தனை முறை கேட்டும் மாவட்ட மருத்துவமனை நிர்வாகம் உரிய பதிலை சொல்லவில்லை.. இது தொடர்பாக ஒருவரை கைது செய்து விட்டதாக போலீசார் சொல்கிறார்கள்..
மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்ட 10 நாட்களுக்குள் இன்னொரு மாற்றுத்திறனாளி குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கிறாள்.. ஒருவேளை குழந்தைகள் காப்பகம் போல எங்காவது பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.. தேர்தல் வெற்றிக்காக குற்றவாளிகளை அரசு பாதுகாக்கிறது..

வண்டலூர் அரசு மருத்துவமனை
பாதிக்கப்பட்டிருப்பது மாற்றுத்திறனாளி குழந்தை என்பது கொடூரமான விஷயம்.. 10 நாட்களுக்கு முன்புகூட வண்டலூர் பஞ்சாயத்து அரசுப் பள்ளி மாணவியை 4 பேர் தூக்கிச் சென்று வன்கொடுமை செய்துவிட்டதாகவும், அந்த சிறுமி ஆபத்தான நிலையில் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சொன்னார்கள்.. கடைசியில் அந்த மாணவியை பாம்பு கடித்து விட்டதாக சொல்கிறார்கள்.. பாம்பு கடித்திருந்தது தொடர்பாக எந்தவிதமான ஆதாரப்பூர்வமான விஷயத்தையும் காட்டவில்லை.. மாணவியின் உடம்பு நீலநிறத்திலும் இல்லை..
அரசு தரப்பில், காவல்துறை சொல்வது மட்டும்தான் நடக்கிறது.. இதற்கெல்லாம் காரணம் போதை மட்டுமே.. தமிழகத்தில் போதை நடமாட்டம் அதிதீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.. இந்த போதையால், பெண் குழந்தைகளை தேடித்தேடி இப்படி செய்கிறார்கள்.. சிங்கப்பெண், புலிப்பெண் என எதை போட்டாலும் பலனில்லை.. தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு உருவாக்க வேண்டும்..
எதை நம்பி பெண் பிள்ளைகளுக்கு வெளியில் அனுப்புவது? கையை விட்டு செல்லாதபடி பெண் குழந்தைகளை நகராமல் இறுக்கி பிடித்து கொண்டிருக்க வேண்டியதுதான்.. கூட்டு இயக்கங்கள் நடத்தினால் மட்டுமே போதைப்பொருளை ஒழிக்க முடியும்.. காவல்துறை, உளவுத்துறை சீரியஸான செயல்பாட்டில் இறங்கவேண்டும்" என்று நம்மிடம் ஆவேசமாக சொல்கிறார் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பாலபாரதி...!!


Click it and Unblock the Notifications
