உத்தரபிரதேசத்தில் ஹலால் சான்றிதழ் உணவுகளுக்கு தடை! ஜவாஹிருல்லா கடும் கண்டனம்!
சென்னை: உத்தரபிரதேசத்தில் ஹலால் சான்றிதழ் உணவுகளுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ஹலால் தரச் சான்றுடன் கூடிய உணவுகளை உற்பத்தி செய்யவும் விற்கவும் உத்தரப்பிரதேச அரசு தடை விதித்துள்ளது. மேலும் இந்த விதிமுறைகளை உத்தரப்பிரதேசத்தில் இயங்கும் நிறுவனங்கள் மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதே வேளையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு இந்த கட்டுப்பாடு கிடையாது எனக் குறிப்பிட்டுள்ளது.
ஹலால் சான்றிதழ் செயல்முறையானது, இந்தியாவில் ஏற்றுமதி நோக்கங்களுக்காகவும் உள்நாட்டு விநியோகத்திற்காகவும் உற்பத்தியாளர்களின் தேவைகளுடன் ஒத்துப்போகிறது. ஹலால் சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகளுக்கான உலகளாவிய தேவை வலுவானது, இந்தியாவில் உணவுப் பண்டங்களுக்கு ஹலால் சான்றிதழை ஹலால் இந்தியா நிறுவனம் வழங்கி வருகின்றது. இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் 57 இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு (ஓஐசி) நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சுயாதீன சான்றிதழ் அமைப்பாக ஹலால் இந்தியா நிறுவனம் விளங்குகின்றது.
நவீன உணவு பதப்படுத்தும் தொழிலில், சுத்திகரிக்கப்பட்ட உப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் போன்ற சில பொருட்கள் விலங்குகளின் எலும்புகளை உள்ளடக்கிய தயாரிப்பு முறைகளுக்கு உட்படலாம். இது சைவ உணவு உண்பவர்களுக்குக் கவலையை ஏற்படுத்துகிறது. இவர்களின் கவலையை ஹலால் சான்றிதழ் தீர்த்து வைக்கின்றது. மதக்கோட்பாடுகளைப் பாதுகாப்பதிலும், இந்தியப் பொருட்களின் உலகளாவிய நிலைப்பாட்டை உறுதி செய்வதிலும் ஹலால் சான்றிதழ் அமைப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன.
ஹலால் சான்றிதழைப் பெறுவதன் மூலம், இந்தியத் தயாரிப்புகள் இப்போது உலகளவில்120 க்கும் மேற்பட்ட நாடுகளில் அனுப்பபடுகின்றன. இது நுகர்வோருக்கு நம்பிக்கையையும் திருப்தியையும் ஏற்படுத்துகிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியப் பொருட்களின் பங்களிப்பில் 7% வருடாந்திர வளர்ச்சியைத் தூண்டும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
தொழில்துறை உலகமயமாக்கல் காரணமாக உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஹலால் தரத்தைப் பின்பற்றுகின்றன. ஹலால் இந்தியா, பொருள்சார் நிபுணர்களுடன், பயோவெரிடாஸ் மற்றும் இன்ட்ராடெக் போன்ற ஆய்வகங்கள் மூலம் பொருட்களைச் சரிபார்த்து, மனித நுகர்வுக்கான பாதுகாப்பை உறுதி செய்கிறது. இந்த சான்றிதழானது ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏற்றுமதியை எளிதாக்குகிறது.
இவற்றில் எதனையும் கருத்தில் கொள்ளாமல் முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்துகிற நோக்கில் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தின் பாரதிய ஜனதா கட்சி அரசு செயல்பட்டு வருகிறது. இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் உண்ணக் கூடிய விலங்குகளை ஹலால் முறைப்படி அறுத்தால் மட்டுமே முஸ்லிம்கள் சாப்பிடுவார்கள். முஸ்லிம்களிடமிருந்து இறைச்சி உண்ணும் பழக்கத்தை அப்புறப்படுத்த முயலும் மிகக்கேவலமான உத்தியை ஆதித்யநாத் அரசு கடைபிடித்துள்ளது.
ஒரு மனிதன் எந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்று தீர்மானிப்பது அவருடைய அடிப்படை உரிமை. இந்த தடையின் வாயிலாக அடிப்படை உரிமையிலேயே கை வைத்திருக்கிறது உத்தரப் பிரதேச அரசு.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாழும் மக்களுக்கு ஹலால் உணவு தடை செய்யப்பட்டு இருந்தாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் தடை இல்லை என்று உத்தரவிட்டதன் வாயிலாக யோகி ஆதித்யநாத் அவர்களின் இரட்டை வேடம் அம்பலப்பட்டு இருக்கிறது. மிக மோசமான முன் உதாரணத்தை உத்தரப்பிரதேச அரசு கடைப்பிடித்துள்ளது. ஆதித்யநாத் அரசு இது தொடர்பாகக் காவல்நிலையத்தில் பதிவு செய்துள்ள வழக்கைத் திரும்பப் பெறுவதுடன் உடனடியாக விரும்பிய உணவை உண்ணும் உரிமைக்கு எதிரான ஆணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோருகின்றேன்.












Click it and Unblock the Notifications