பெங்களூர் டிரைவரின் சிறு தவறு.. கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடனக் கலைஞர்களுக்கு எமனாகிய லாரி
பெங்களூர்: பெங்களூர் சிவராமபுராவை சேர்ந்த பிரஜ்வல் மற்றும் சகானா என இரண்டு பேரும் நடன கலைஞர்கள் ஆவார்கள். இவர்கள் சினிமா படங்களில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கு நடனமாடுவதை தொழிலாக கொண்டவர்கள். இதுதவிர திருமணம், திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகளிலும் 2 பேரும் நடனமாடி வந்தார்கள். நேற்று திருமண நிகழ்ச்சியில் வழக்கம் போல் பங்கேற்றவர்கள் திரும்ப வீட்டிற்கு வந்தனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்களுக்கு லாரி ஒன்று எமனாக காத்திருந்தது.
பொதுவாகவே தேசிய நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனத்தில் நள்ளிரவு நேரங்களில் நீண்ட தூரம் செல்வது நல்லது இல்லை.. ஏனெனில் அதிவேகத்தில் வரும் பேருந்துகள், லாரி மற்றும் கார்கள், கண் இமைக்கும் நேரத்தில் மோதிவிட்டு செல்ல வாய்ப்பு உள்ளது. பல பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது நடக்கிறது. கண் இமைக்கும் நேரத்தில் சில டிரைவர்கள் தூக்க கலக்கத்தில் செய்யும் செயல்கள் பலரையும் பாதிக்கிறது.

பெங்களூர் நடன கலைஞர்கள்
கர்நாடகா மாநிலம் பெங்களூர் சிவராமபுராவை சேர்ந்த 22 வயதாகும் பிரஜ்வல் என்பவரும், அதே பகுதியில் வசித்து வந்த 21 வயதாகும் சகானா என்பரும் நடன கலைஞர்கள் ஆவார்கள். பிரஜ்வல் மற்றும் சகானா சில சினிமா படங்களில் இடம் பெற்றுள்ள பாடல்களுக்கு நடனமாடி உள்ளனர். இதுதவிர திருமணம், திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகளிலும் 2 பேரும் நடனமாடி வந்திருக்கிறார்கள்.
துமகூரு நிகழ்ச்சி
துமகூரு மாவட்டம் குனிகல்லில் நடந்த திருமண நிகழ்ச்சியில் நடனமாட அழைந்திருந்தனர். அதன்படியே துமகூரு சென்ற நடன கலைஞர்கள், நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நேற்று முன்தினம் இரவு பெங்களூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். பிரஜ்வல், சகானா ஆகிய இருவரும் இரவு 11.30 மணியளவில் பெங்களூர் புறநகர் மாவட்டம் நெலமங்களா அருகே பெங்களூரு-குனிகல் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.
லாரி வந்தது
அப்போது அதே சாலையில் வந்த லாரி ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பிரஜ்வல், சகானா ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்ததும் நெலமங்களா போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர்.
டிரைவரின் தவறு
அப்போது லாரியை டிரைவர் கவனக்குறைவாகவும், வேகமாகவும் ஓட்டியதே விபத்திற்கு காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து நெலமங்களா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர். மேலும் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தார்கள். தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் நீண்ட தூரம் செல்வதை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள் வாகன ஓட்டிகள்.












Click it and Unblock the Notifications