வந்தாச்சு பீர் பஸ்.. சென்னை டூ புதுச்சேரி.. குடிமகன்களுக்கு குஷி தரும் திட்டம்.. என்ஜாய் மக்களே!
சென்னை: சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு ஒரு நாள் சுற்றுலா சென்று திரும்பும் வகையில் புதிய பஸ் சேவை தொடங்க உள்ளதாம். இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா, இந்த பஸ்ஸின் பெயரே,பீர் பஸ்.. என்னப்பா சொல்ற,, பீர் பஸ்ஸா.. அப்ப பஸ்சுல குடிச்சிக்கிட்டே புதுச்சேரியை சுத்தி பாக்கலாமா என்று கேட்டால் அதில் ஒரு கண்டிசன் இருக்கு என்கிறார்கள்.
அப்படி என்ன கண்டிசன், புதுச்சேரி பீர் பஸ் திட்டம் யாரால் தொடங்கப்படுகிறது, எப்போது முதல் தொடங்கப்படுகிறது, கட்டணம் எவ்வளவு என்பதை இப்போது பார்ப்போம்.

சென்னையில் வசிக்கும் பல குடிமகன்களுக்கு பாண்டிச்சேரி சென்று ஒரு நாள் ஜாலியாக இருந்து வர வேண்டும் என்ற விருப்பமும் இருக்கும். வார இறுதிநாட்களை அப்படி ஜாலியாக கழிக்கும் குடிமகன்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை குறிவைத்து புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் புது சேவையை அளிக்க முடிவு செய்துள்ளது.
கட்டமரான் பிரேவிங் கோ-பாண்டி' என்ற நிறுவனம் புதுச்சேரியில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தான் சென்னையில் இருந்து புதுச்சேரி செல்ல, 'பீர் பஸ்' என்ற புதிய சுற்றுலா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த பீர் பஸ் சேவை, வரும், 22ம் தேதி துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு ஒரு நாள் சென்று சுற்றிப்பார்ப்பதற்கு, நபர் ஒன்றுக்கு, 3,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த பீர் பஸ்ஸில பல விதமான உணவு வகையை சாப்பிட்டப்படியே புதுச்சேரியின் அழகை சுற்றி பார்த்து ரசிக்கலாம். அதேநேரம் பீர் பஸ் என்பதால் யாரும் பஸ்ஸில் மது அருந்தலாம் என்று நினைக்க வேண்டாம். அதற்கும் கட்டுப்பாடு இருக்கிறது.
இதுகுறித்து அந்நிறுவன ஏற்பாட்டாளர்கள் கூறும்போது, 'பீர் பஸ்' என அழைப்பதால், பஸ்சில் மதுபானங்களை குடிக்கலாம் என, யாரும் நினைக்காதீங்க... பஸ்சில் பீர் குடிக்க அனுமதிக்கமாட்டோம். ஆனால், புதுச்சேரி அரசால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் பஸ் நிறுத்தப்படும். அங்குள்ள இடத்தில் பீர் குடிக்க அனுமதிக்கப்படும் என்றார்கள்.
சென்னையில் இருந்து, 35 முதல் 40 சுற்றுலா பயணிகள், புதுச்சேரிக்கு அழைத்து செல்லப்பட்டு, அன்றைய தினமே மீண்டும் சென்னை திரும்பலாம். இதற்கான முன்பதிவு துவங்கி விட்டதாகவும் அவர்கள் கூறினார்கள்.
சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு பீர் பஸ் அறிவிக்கப்பட்டதை பலரும் சமூக வலைதளங்களில் அந்த செய்தியை ஷேர் செய்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுலா பயணிகளை கவர பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களையும், நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அவ்வப்போது நடத்தி வருகின்றன.
கடந்த வாரம் புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியில் காட்டுக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்ட க பாரில் இளைஞர்கள் மதுபிரியர்கள் கவரும் வகையில் இன்று ஒருநாள் மட்டும் பெண்களுக்கு மது இலவசம் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications