“சீமானுக்காக தவெக தொண்டர்கள் வாட்ஸ்அப் குழுக்களில் ஓட்டு கேட்டனர்” CTR நிர்மல்குமார் சொன்ன சீக்ரெட்!
மதுரை: "2024 தேர்தலில் பெரும்பாலான தவெக தொண்டர்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என அப்போது வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்தனர்.. இதனால் தான் சீமானுக்கு 8 சதவீத வாக்குகள் வந்தன" என சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக இணை பொதுச் செயலாளரும் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி தவெக வேட்பாளருமான சி.டி.ஆர். நிர்மல் குமார் பேட்டி அளித்துள்ளார். அப்போது, தவெக தொண்டர்களின் ஆதரவால் தான் கடந்த 2024 லோக்சபா தேர்தலில் சீமானுக்கு 8% வாக்கு வந்தது எனத் தெரிவித்துள்ளார்.

சிடிஆர் நிர்மல் குமார் பேசுகையில், "பியூஷ் கோயலுக்கு தமிழக அரசியல் தெரியாது. மக்களுக்கு தெரியும் யார் பி டீம் என.. ஊழல் செய்த எத்தனை திமுக அமைச்சர்கள் மீது மத்திய விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுத்துள்ளன? திமுக - பாஜக இடையே மிக நல்ல உறவு உள்ளது. பாஜகவுக்கு திமுக, அதிமுக யாராக இருந்தாலும் ஒன்று தான். எவ்வளவோ மிரட்டிப் பார்த்தார்கள், நாங்கள் எதற்கும் அடிபணியாமல் இருக்கிறோம். அதனால் எங்களை அப்படிப் பேசுகிறார்கள்.
எங்களுக்கு எல்லா தரப்பு மக்களின் ஆதரவும் உண்டு. திமுக வாக்குகளை மட்டும் பிரிக்கவில்லை. அதிமுகவினர் வீடுகளிலும் எங்கள் வாக்கு உண்டு. பியூஷ் கோயலுக்கு தமிழ்நாட்டைப் பற்றி தெரியாது. தமிழ்நாட்டு மக்களை முதலில் புரிந்து கொள்ளுங்கள். பாஜக தமிழக களத்திலேயே கிடையாது. ஒரு சதவிகித வாக்கு வைத்துள்ளவர்களைப் பற்றி பேச வேண்டியதில்லை" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "தவெக தொண்டர்களின் ஆதரவால் தான் சீமானுக்கு 8% வாக்கு வந்தது. சீமான் 2024 தேர்தலில் விஜய் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தார். பெரும்பாலான தவெக தொண்டர்கள் நாம் தமிழருக்கு ஓட்டு போடுங்கள் என அப்போது வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்தனர். அதன் அடிப்படையில் தான் அவருக்கு அந்த வாக்கு வந்தது. விஜய்யை தனது தம்பி என்று தான் சீமான் சொல்லிக்கொண்டிருந்தார். யாருக்கும் அடிபணியாமல் இருப்பேன் என விஜய் சொன்னதும், சீமான் தனது ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.
சீமான் இப்போது காமெடி செய்து கொண்டிருக்கிறார். அவர் அரசியலில் வென்று மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. அவர் ஒரு யூடியூபர் போல தான் இயங்கிக் கொண்டிருக்கிறார். ஒரு பொறுப்பான அரசியல் தலைவரைப் போலச் செயல்படாமல், வெறும் யூடியூபர் போலத் தனது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டிருக்கிறார். கள நிலவரப்படி சீமானுக்குப் பெரிய அளவில் ஆதரவு இல்லை. இந்தத் தேர்தலில் அவருக்கு அதிகபட்சம் இரண்டு சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும்.
வைகோ, விஜயகாந்த், காங்கிரஸ் என ஒரு மூன்றாவது அணிக்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள். இப்போது விஜய் கண்டிப்பாக முதல்வராக வருவார் என மக்கள் நம்புகிறார்கள். அதனால் எங்களுக்கு அந்த வாக்குகள் முழுவதும் வரும். ஆளுங்கட்சியின் தடைகள் மற்றும் அரசியல் சூழ்ச்சிகளுக்குப் பணியாமல், கழகம் 234 தொகுதிகளிலும் மிகுந்த நம்பிக்கையுடனும் வலிமையுடனும் தேர்தலைச் சந்திக்கும்" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய சிடிஆர் நிர்மல் குமார், "தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களுக்கு எல்லா இடங்களிலும் திமுகவினர் ஆட்சேபனை தெரிவித்திருக்கிறார்கள். எந்தவிதமான அடிப்படை முகாந்திரமும் இன்றி திட்டமிட்டு ஆட்சேபனைகளைத் தெரிவித்தனர். அதைத் தாண்டி இத்தனை சூழ்ச்சிகளையும் சட்டரீதியாக முறியடித்து அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
வேட்பாளர்கள் செல்போன் சுவிட்ச் ஆப் செய்து இருந்தால் பிரச்சாரத்தில் இருந்திருப்பார்கள். வேட்பாளர், வேட்பு மனு சரிபார்க்கும் இடத்திற்கு மீண்டும் வரவேண்டும் என்று அவசியம் இல்லை. வேட்பாளர் மாற்றத்தில் அழுத்தம் இல்லை. 234 பேரில் நாங்கள் ஒன்று இரண்டு என்று மாற்றுவது பெரிய மாற்றமில்லை. 40% வாக்குகள் தெளிவாக உள்ளது அதில் என்ற மாற்றமும் இல்லை.
எங்கள் தலைவரின் பிரச்சாரம் பல போராட்டங்களுக்குப் பிறகு அனுமதி கிடைத்துள்ளது. நிறைய இடங்களில் தலைவரின் சுற்றுப்பயணம் திட்டம் அனுமதி கேட்டதற்கு தேதியை மாற்ற சொல்லி பல காரணங்கள் கூறினார்கள். ஒவ்வொருவரும் உள்ளூர் காவல்துறையிடம் அனுமதி பெறுவது தான் போராட்டமாக உள்ளது. பூத் நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி தேவை இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனாலும் காவல்துறையினர் ஒரு வருடங்களில் எங்கள் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு பதிகிறார்கள்.
எங்களுக்கு மட்டும் அனுமதியில் பிரச்சனை உள்ளது மற்ற கட்சி வேட்பாளர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை. இதுபோன்ற பிரச்சனைகளை மக்கள் தெரிந்து கொண்டு வாக்களிக்க வேண்டும். மதுரையில் தலைவர் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு இருக்கிறோம். ஆனால் இன்னும் வரவில்லை வந்தவுடன் தேதியைச் சொல்கிறோம்.
அதிமுக எனும் கட்சி எந்த மாதிரி இடத்தில் உள்ளது என எல்லாருக்கும் தெரியும் 2024 தேர்தல் வரை அவர்களுக்கு தனித்துவம் இருந்ததாக உணர்ந்தோம். இப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்து டெல்லிக்கு சென்றார்களோ அவர்கள் தொண்டர்களே அவர்களுடன் இல்லை. அவர்களின் வாக்குறுதிகளை கூட யாரும் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் 20 தொகுதி ஜெயித்தாலே பெரிய விஷயம்தான்.
கட்சியை டெல்லியில் அடமானம் வைத்து விட்டதாக அதிமுக தொண்டர்களை பேசுகிறார்கள். கட்சி பொதுச் செயலாளர்களுக்கு ஒரு மரியாதை உள்ளது. ஆனால் டெல்லியில் இருந்து அழைப்பு வந்தவுடன் அடுத்த நிமிடம் டெல்லிக்கு போவதை யாரும் பார்த்ததில்லை. அவரைக் காப்பாற்றுவதற்காக அவர் போராடிக் கொண்டிருக்கிறார். அவர் எங்களைப் பற்றி பேசுவது சரியில்லை. அதிமுகவிற்கு தமிழக அரசியலில் இடமில்லை. திமுகவுக்கு எங்களுக்கும் தான் போட்டி." எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications