உஷார்.. ஒருவரிடமிருந்து 17 பேருக்கு பரவும் பிஎப் 7 வகை கொரோனா.. அமைச்சர் மா.சு. எச்சரிக்கை
சென்னை: சீனாவிலிருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வந்த இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், பிஎப் 7 புதிய வகை கொரோனா வைரஸ், ஒருவர் மூலமாக 17 பேர் வரை வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று எச்சரித்துள்ளார்.
சீனாவில் அதிகரித்து வரும் பிஎப் 7 புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கியது. இதையடுத்து புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து பிஎப் 7 அதிகரித்து வரும் நாடுகளிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது.

இருவருக்கு கொரோனா உறுதி
இந்த நிலையில் சீனாவிலிருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வந்த இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தை சேர்நத 36 வயது பெண் மற்றும் அவரது 5 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் இருவருக்கும் அறிகுறி ஏதும் இல்லாததால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பிஎப் 7 வகை கொரோனா தொற்று உள்ளதா என கண்டறிய அவர்களது மாதிரிகள் சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

மா.சுப்பிரமணியன் பேட்டி
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பயணிகள் சீனாவில் இருந்து தென் கொரியா மற்றும் இலங்கை வழியாக மதுரை வந்துள்ளனர். அவர்களை கண்காணித்து ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்பட்டது. அதில் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து குடும்பத்தைச் சேர்ந்த மூவருமே வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

விமான நிலையங்கள்
அவர்களை கண்காணிக்க மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களின் மாதிரிகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மரபணு பகுப்பாய்வு கூடத்தில் சோதனை செய்யப்பட்டு, இன்னும் 4 முதல் 5 நாட்களில் முடிவு கிடைத்துவிடும். இதன் மூலம் பிஎப் 7 கொரோனா வைரஸா என்பது தெரிய வரும். அதேபோல் தொற்றால் பாதிக்கப்பட்ட இருவரும் மிதமான பாதிப்புடன் தனிமையில் இருக்கிறார்கள். சென்னை, மதுரை, திருச்சி, கோவை என 4 விமான நிலைங்களிலும் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்குமே கொரோனா பரிசோதனை செய்ய பணிகள் செய்யப்பட்டுள்ளது. என்று தெரிவித்தார்.

பிஎப் 7 வகை கொரோனா
தொடர்ந்து கொரோனா விதிமுறைகள் குறித்த கேள்விக்கு, தமிழ்நாட்டில் கொரோனா விதிமுறைகள் 100 சதவிகிதம் அமலில் இருக்கிறது. கொண்டாட்டங்களில், திருவிழாக்கள் என கூட்டங்கள் நிறைந்து காணப்படும் இடங்களில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பிஎப் 7 கொரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது. குறிப்பாக பிஎப் 7 வகை வைரஸ், ஒருவரை பாதித்தால் அவர்கள் மூலம் 17 பேருக்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது. எனவே, விரைந்து பரவும் என்பதால், பிரேசில், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் கூட அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது என்று தெரிவித்தார்.

தடுப்பூசி நிறுத்தம்
தொடர்ந்து தடுப்பூசி பற்றிய கேள்விக்கு, தடுப்பூசி அதிகரிப்பது மத்திய அரசின் கைகளிலேயே உள்ளது. ஏனென்றால் தடுப்பூசி விநியோகத்தையும், உற்பத்தியையும் மத்திய அரசு நிறுத்திவிட்டது. தமிழகத்தில் 3 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கிறது. மூக்கு வழியே செலுத்தப்படும் தடுப்பு மருந்தை அரசு மருத்துவமனை மூலம் தமிழகத்தில் செலுத்த கோரிக்கை வைக்கப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications