கருணாநிதிக்கு பாரத ரத்னா? திமுக அடுத்த மூவ்: கோட்டை விட்ட அதிமுக? கொண்டாட தவறிய எடப்பாடி!
சென்னை: திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதிக்கு விரைவில் ஸ்டாலின் பாரத ரத்னா பெற்றுத் தந்துவிடுவார் என்ற ஒரு கருத்தை மூத்த ஊடகவியலாளர் ஒருவர் முன்வைத்துள்ளார்.
திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு தொடங்கிவைத்தார். அவரது நினைவாகக் கிண்டியில் கிண்டி பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையைத் தொடங்கி வைத்தார். அதைப்போன்று கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூரில் கலைஞர் கோட்டம் ஒன்றைக் கட்டி திறந்துவைத்தார். மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஒன்று திறக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாகக் கடந்த 18 ஆம் தேதி கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவின் அடையாளமாக 100 ரூபாய் நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிட்டார். அதற்கு முன்னதாக ராஜ்நாத்சிங், மெரினா கடற்கரையில் உள்ள மு.கருணாநிதி நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார். இதனால் பாஜக மற்றும் திமுகவுக்கு ரகசிய உளவு இருப்பது வெளிப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி இருந்தார். அதற்கு முதல்வர் ஸ்டாலின், "கருணாநிதியின் நினைவிடத்திற்குச் செல்ல வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை. மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கே அவரது நினைவிடம் எங்கே உள்ளது? அங்கே கட்டாயம் போகவேண்டும் என்று அவரே கேட்டுச் சென்றார்" என்று விளக்கம் அளித்திருந்தார்.
ஆட்சியிலிருந்தபோது ஜெயலலிதாவுக்கு ஒரு இரங்கல் கூட்டத்தைக் கூட அதிமுக நடத்தவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டி இருந்தார். திமுக தலைவர் கருணாநிதி புகழைத் தேசிய அளவில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதி அந்தக் கட்சி முனைப்போடு செயல்பட்டு வருகிறது. ஆனால், அதிமுக தொண்டர்கள் அவர்களின் தலைவர்களை முறையாக கௌரவப்படுத்தவில்லை என்று குரல் இப்போது ஒலிக்கத் தொடங்கி உள்ளது. இது பற்றி மூத்த பத்திரிகையாளர் பிரியன் சில விளக்கங்களை அளித்துள்ளார். அவர் ஜெயலலிதாவையே சந்தித்து ஒரு காலத்தில் பேட்டி எடுத்தவர்.
பிரியன் பேசும் போது, "இதுவரை முன்னாள் திமுக தலைவர் கருணாநிதிக்கு உரிய மரியாதையை எந்தவகையில் எல்லாம் பெற்றுத் தர முடியுமோ அதை எல்லாம் ஸ்டாலின் முறையாகப் பெற்றுத் தந்துள்ளார். ஒரு மகனாக அவர் தனது தந்தைக்குச் செய்ய வேண்டியதைச் செய்துள்ளார் என்றே சொல்வேன். அதற்காகத்தான் வேறு மாநிலத் தலைவர்களை அழைத்து கருணாநிதியின் படத்தைத் திறக்கிறார். அவரது நினைவு மண்டபத்தை திறக்கிறார். இப்போது நாணயத்தை வெளியிட்டுள்ளார். இதனால் கருணாநிதியின் புகழை தேசிய அளவில் அவர் கொண்டுபோய் சேர்த்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக விரைவில் கருணாநிதிக்குப் பாரத ரத்னா பெற்றுத் தந்து விடுவார். அதற்காக முயற்சியை அவர் செய்வார் என்றே நான் நம்புகிறேன். 2016இல் ஜெயலலிதாவுக்குப் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என அதிமுக கேட்டது. ஏன் இதுவரை கொடுக்கவில்லை? அப்போது அன்புமணி, 'நாட்டுக்கு மிகப்பெரிய சாதனையை ஜெயலலிதா ஒன்றும் செய்யவில்லை. எனவே அவருக்குத் தர தேவையில்லை' என்று சொன்னார். அவரை பிறகு அதிமுக கூட்டணியில் சேர்த்துக்கொண்டது. ஒரு பத்திரிகையாளராக ஜெயலலிதா நாட்டுக்குப் பல சாதனைகளைச் செய்திருக்கிறார். ஒரு பத்திரிகையாளராக நான் அவரை மிகக் கடுமையாக விமர்சித்து நிறையக் கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். 69% இடஒதுக்கீடு அவரின் சாதனைகளில் ஒன்று. அப்படிப்பட்ட தலைவியின் புகழை தேசிய அளவில் கொண்டுபோய் சேர்க்க ஏதேனும் முயற்சி எடுத்ததா? சிலையைக் கட்சி வளாகத்தில் திறந்தார்கள், யாரை வைத்துத் திறந்தார்கள்? அவர்களே திறந்து கொண்டார்கள். நினைவிடத்தைத் திறந்தார்கள். யாரை வைத்து திறந்தார்கள் எனப் பார்த்தால், அதிமுகவினரே திறந்து கொண்டார்கள். சட்டசபைக்குள் ஜெயலலிதாவின் படத்தைக் கூட அதிமுகவினரே திறந்து கொண்டார்கள்.
தேசிய அளவில் பாஜக கூட்டணியில்தானே அதிமுக இருந்தது. ஆட்சிக்காலத்தில் ஏன் ஒரு மத்திய அமைச்சரைக் கூட அழைத்து ஜெயலலிதாவுக்கு விழா எடுக்கவில்லை? ஜெயலலிதாவை பாஜகவினர் பார்க்கும் பார்வையே வித்தியாசமாக உள்ளது. அவர் ஒரு தண்டனைப் பெற்ற குற்றவாளி எனப் பார்க்கிறார்களோ என்று தோன்றுகிறது. எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை மாவட்டம் தோறும் நடத்தினார்கள். அது எழுச்சியாக நடத்தப்பட்ட விழாவா? கடமைக்கு நடத்தப்பட்டது. நான்கரை ஆண்டுகள் ஆட்சியிலிருந்த அதிமுகவால் ஜெயலலிதாவுக்கு ஓர் இரங்கல் கூட்டம் கூட போடமுடியவில்லை என்று ஸ்டாலின் குற்றஞ்சாட்டி இருக்கிறார். அது உண்மை. ஏன் ஒரு இரங்கல் கூட்டம் கூட நடத்தப்படவில்லை? ஏனென்றால், கோஷ்டி பூசல் அரசியல் செய்வதற்கே நேரம் போதவில்லை. அவர்கள் எங்கே ஜெயலலிதாவைப் புகழ்ந்து கூட்டம் போடப்போகிறார்கள்?












Click it and Unblock the Notifications