இளையராஜாவுக்கு ஜனாதிபதி பதவியே.. கமல்ஹாசன்; ஆளுநர்கள் ரவி, தமிழிசை, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!
சென்னை: நாடாளுமன்றத்தின் ராஜ்யசபா நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், இயக்குநர் பாரதிராஜா, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
ராஜ்யசபா நியமன எம்.பி.யாக இளையராஜாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். இளையராஜாவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாரதிராஜா வாழ்த்து
இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து: மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமக்கிப்படள்ள என் உயிர் தோழனுக்கு வாழ்த்துக்கள்.

ஜனாதிபதி பதவியே..
இளையராஜாவை வாழ்த்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:ஒப்பாரும் மிக்காரும் இல்லாத @ilaiyaraaja அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்.

ரஜினி வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து:
மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் @ilaiyaraaja.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து: இசை மாமேதை உத்வேகம் தரும் தனது வாழ்க்கை பயணத்தில் இசைஞானி இளையராஜா
@ilaiyaraaja பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்து, தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறார். ராஜ்யசபா உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டதற்கு மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என். ரவி ,அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழிசை சவுந்தரராஜன்
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து: கிராமிய இசையையும்,ஆன்மிக இசையையும் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சென்று அடி அடியாக ரசிக்க வைத்த இசைஞானி இளையராஜா அவர்களின் குரல் நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒலிப்பது தமிழகத்திற்கும்,தமிழருக்கும் பெருமை.... இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்..

மத்திய அமைச்சர் எல்.முருகன்
மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து: நம் தமிழ் திரையுலகின் இசை பொக்கிஷமாக, அரை நூற்றாண்டுகளாக இசைத் துறையில் அரசாட்சி செய்து, பல கோடி மனங்களை தன் பாடல்களால் மகிழச்செய்த #இசைஞானி இளையராஜா அவர்கள் மாநிலங்களவை நியமன எம்.பி ஆக நியமனம் செய்த நமது பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!! ஏழ்மையான பின்புலத்தில் இருந்து வந்து பல்வேறு சாதனைகள் புரிந்த இசைஞானி இளையராஜா அவர்களின் தேசப்பணி சிறந்து விளங்க வாழ்த்துவோம்...!

ஜோதிமணி எம்.பி.
காங். எம்.பி. ஜோதிமணி வாழ்த்து: மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டிருக்கும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இதயப்பூர்வமான நல்வாழ்த்துகள்! இசையின் தேவதூதனைக் கூட பாஜக தலித் என்கிற சாதிய அடையாளத்தோடுதான் பார்க்கும். தயவுசெய்து மதம்,சாதி தாண்டி மனிதர்களையும்,அவர்கள் சாதனைகளையும் பாருங்கள்.இந்த மண்ணில் அமைதி நிலவும்.

நாம் தமிழர் சீமான்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து: தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளங்களுள் ஒருவராகத் திகழ்கிற பெருமதிப்பிற்குரிய ஐயா இசைஞானி @ilaiyaraaja அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்ட செய்தியறிந்து மகிழ்வுற்றேன்.
ஐயா இளையராஜா அவர்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்து, அவரது மாநிலங்களவைச்செயல்பாடுகள் சிறக்க வேண்டுமெனும் பெருவிருப்பத்தைத் தெரிவிக்கிறேன்!. இவ்வாறு சீமான் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications