வந்துருச்சு மெசேஜ்.. சார் பதிவாளர் ஆபீசுக்குள் "இவங்க" வரக்கூடாது: தமிழக பத்திர பதிவுத்துறை ஒரே போடு
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், தமிழக பத்திரப்பதிவு துறை பல்வேறு அதிரடிகளை செய்து வரும்நிலையில், பத்திரப்பதிவு துறை, மேலும் ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இது தமிழக மக்களுக்கு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.
சமீபத்தில், ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்கள் ஆகியோர் சார்-பதிவாளர், பதிவாளர் அலுவலகங்களுக்குள் உள்ளே வரக்கூடாது என்றும், ஆன்லைன் முறையில் குடிமக்களுக்கான நுழைவு வசதியை பயன்படுத்தி, சொத்து பரிமாற்ற விபரங்களை, அடையாள விபரங்களை பொதுமக்களே உள்ளீடு செய்யலாம் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பதிவுத்துறை: இதற்கு காரணம், எல்லாமே இப்போது ஆன்லைன் பதிவு செய்யப்படுவதால், இடத்தை வாங்குபவரும், விற்பவரும் பணத்தை பத்திரப்பதிவு அலுவலத்திற்கு கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை..
அத்துடன், பத்திரப்பதிவு துறையால் வழங்கப்படும் ஆவணங்களில் மாற்றங்களை செய்து பலர் மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், இவைகளுக்கெல்லாம் ஒரு கடிவாளம் போடவே, இந்த முயற்சி எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஆவண எழுத்தர்கள்: ஆனால், சரியான வழிகாட்டி மதிப்பை குறிப்பிடுவது, முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் ஆகியவற்றை கணக்கிடுவதில் ஆவண எழுத்தர்களின் உதவி தேவைப்படுகிறது என்பதால், ஆவண எழுத்தர்களை, சார் பதிவாளர் அலுவலகங்களில் அனுமதிக்க வேண்டும் என்று மற்றொரு சாரார் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இதனிடையே, ஆவண எழுத்தர்களின் உரிமம் புதுப்பித்தல் பணிக்கு, ஆன்லைன் வசதியை பதிவுத்துறை அறிமுகம் செய்திருக்கிறது.
இந்நிலையில், மற்றொரு அதிரடியை பதிவுத்துறை கையில் எடுத்துள்ளது.. சார் பதிவாளர் அலுவலகங்களில், ரொக்க பரிமாற்றம் தடை செய்யப்பட்டாலும், லஞ்ச புகார்கள் தொடர்ந்தபடியே உள்ளன.. இதையடுத்து, வெளியாட்கள் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, மாவட்ட பதிவாளர்களால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது..
பதிவுத்துறை: அப்போதுதான், சார் பதிவாளரின் உறவினர்கள், நண்பர்கள் என்ற அடிப்படையில், தரகர்கள் நடமாடுவது தெரியவந்தது. எனவே, இதற்கும் ஒரு கடிவாளத்தை பதிவுத்துறை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலீவர் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார்.. அதில், "சார் பதிவாளர் அலுவலகங்களில், துறைக்கு தொடர்பில்லாத நபர்கள் யாரும் பணியில் ஈடுபடக்கூடாது என்று ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தரகர்கள் நடமாட்டத்தை தடுக்க, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பெருத்த நிம்மதி: இந்நிலையில், சார் பதிவாளர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் என யாரையும், தன்னிச்சையாக எந்த பணியிலும் ஈடுபடுத்தக்கூடாது. மாவட்ட பதிவாளர்கள் திடீர் ஆய்வுகள் வாயிலாக, இதை கண்காணிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். பதிவுத்துறையின் இந்த அதிரடி உத்தரவால், லஞ்சப்புகார்கள் இனி வெகுவாக குறையும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications