அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..2025ல் கட்சி தாவிய புள்ளிகள்! தமிழகத்தை அதிர வைத்த தலைவர்கள் யார்?
சென்னை: வழக்கம் போலவே 2025 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமலே சென்றது. குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு தரப்பினர் கட்சி தாவி இருக்கின்றனர். 2025-ல் பல முக்கிய பிரமுகர்கள் தாங்கள் இருந்த கட்சியில் இருந்து வேறு கட்சிகளுக்கு தாவி இருக்கிறார்கள். அந்த வகையில் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் உள்ளிட்ட புள்ளிகள் கட்சி தாவி இருக்கின்றனர். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு கட்சித் தாவிய தலைவர்கள் யார் அவர்களது பின்னணி என்ன என்பது குறித்து பார்க்கலாம்..
2026 தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வருகிறது. அதிமுக, திமுக என ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் தேர்தலுக்கு தங்கள் தொண்டர்களை தயார்படுத்தி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் விஜயின் தவெக, நாம் தமிழர் சீமான் உள்ளிட்ட கட்சிகளும் தனித்தனி அணியாக களம் காண்கின்றன.

ஒவ்வொரு சட்டசபை தேர்தலின் போதும் அதற்கு முந்தைய ஆண்டு அல்லது தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு கூட கட்சி தாவல்கள் தமிழகத்தில் அரங்கேறுவது வழக்கம். ஆளுங்கட்சியிலிருந்து கூட சில தலைவர்கள் எதிர்க்கட்சிகளுக்கு தாவி இருக்கிறார்கள். எதிர்க்கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்கு தாவும் சம்பவங்களும் நடைபெற்றிருக்கிறது. அப்படி இந்த ஆண்டு நடைபெற்ற முக்கிய கட்சி தாவல் சம்பவங்களையும் கட்சித் தாவிய தலைவர்கள் குறித்தும் பார்க்கலாம்..

சிடிஆர் நிர்மல் குமார்
இந்த ஆண்டின் தொடக்கமான ஜனவரி மாதத்தில் நிகழ்ந்த முக்கிய கட்சி தாவல் நிகழ்வு என்றால் அது சிடிஆர் நிர்மல் குமார் அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்திற்கு சென்றது. டிசம்பர் மாதத்தில் ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்திற்கு இணைந்தார். அதற்கு பிறகு பல்வேறு கட்சிகளில் இருந்து நிர்வாகிகளை இழுக்கும் அசைன்மென்ட் அவருக்கு கொடுக்கப்பட்டது. அப்படி பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு சென்று ஐடி விங்க் நிர்வாகியாக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார். தொடர்ந்து அவருக்கு இணை பொது செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழகத்தினரை ஒருங்கிணைத்ததில் சிடிஆர் நிர்மல் குமாருக்கு முக்கிய பங்கு உண்டு.

மைத்ரேயன்
ஆரம்பத்தில் பாஜகவில் இருந்து விலகிய மைத்ரேயன் அதிமுகவில் இணைந்திருந்தார். பாஜக திமுக கூட்டணி இணைந்ததால் தான் அவர் கட்சியிலிருந்து வெளியேறியதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்து அவருக்கு மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடும் அதிருப்தியில் இருந்த மைத்ரேயன் திடீரென திமுகவில் இணைந்தார். இணைந்த புதிதிலேயே அவருக்கு பதவியும் வழங்கப்பட்டது. வரும் சட்டமன்ற தேர்தல் அல்லது மாநிலங்களவைத் தேர்தலில் மைத்ரேயனுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மருது அழகுராஜ்
அதிமுகவின் பிரச்சார பீரங்கிகளில் ஒருவராக பார்க்கப்பட்டவர். ஜெயலலிதா இருந்தபோது நமது எம்ஜிஆர், அதற்குப் பிறகு நமது அம்மா கட்சி நாளிதழ்களின் ஆசிரியராக இருந்தவர். ஓபிஎஸ் பிரிந்து சென்ற போது அவருக்கு தீவிர ஆதரவாளராக நின்றவர் நமது புரட்சித் தொண்டன் நாளிதழின் ஆசிரியராகவும் நியமிக்கப்பட்டார். இதற்கிடையே விஜய் கட்சி ஆரம்பித்தபோது சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வந்தார். ஆனால் விஜய் கண்டுகொள்ளாததால் திடீரென திமுகவில் இணைந்து இருக்கிறார் .ஓபிஎஸ் -ன் ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் படலத்தை தொடங்கி வைத்தவரும் அவர்தான்.

மனோஜ் பாண்டியன்
அதிமுகவின் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர்களை மனோஜ் பாண்டியன் ஒருவர். அவரது தந்தை அதிமுக எம்எல்ஏவாக இருந்ததோடு வழக்கறிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட மனோஜ் பாண்டியன், ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். பல்வேறு நெருக்கடிகளில் ஓபிஎஸ் கூடவே இருந்தவர். எடப்பாடி பழனிச்சாமி எதிர்த்தவர்கள் எல்லாம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் அதிமுகவில் சேரவே முடியாது என்ற நிலை உருவானது. இதனால் தனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திமுகவில் ஐக்கியமானார் மனோஜ் பாண்டியன். உண்மையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது மிகப்பெரிய இழப்புதான். திமுகவில் சேர்வதற்கு முன்னதாக தனது பதவியை அவர் ராஜினாமா செய்ததும் குறிப்பிடத்தக்கது.

அன்வர் ராஜா
அதிமுகவில் இருந்த ஒரு சில சிறுபான்மையின தலைவர்களில் முக்கியமானவர் அன்வர் ராஜா. முன்னாள் அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமியின் மீது கொண்ட அதிருப்தி காரணமாக விலகி இருந்தார். மீண்டும் எடப்பாடி உடன் சேர்ந்து பணியாற்றினாலும் கரங்கள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்பது போல் தான் இருந்தது. குறிப்பாக அதிமுக பாஜக கூட்டணி அமைந்த பிறகு மிகுந்த அதிருப்தியில் இருந்த அவர் திடீரென திமுகவில் இணைந்து அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதற்கு பிறகு தான் அதிமுகவினர் தொடர்ந்து திமுக தலைமையை நாட தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னசாமி
ஐஎன்டியுசி தொழிற்சங்க தலைவராக இருந்த சின்னசாமி அந்த சங்கத்தில் ஏற்பட்ட பிளவு காரணமாக அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். தொடர்ந்து இரண்டு முறை எம்.எல்.ஏ ஆன அவருக்கு மூன்றாவது முறை அதிர்ஷ்டம் கிட்டவில்லை. அதே நேரத்தில் ஜெயலலிதாவால் அதிமுக தொழிற்சங்கப் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வழக்கம் போல எடப்பாடி பழனிச்சாமி உடன் சின்னசாமிக்கு மோதல் ஏற்பட்டது. தொழிற்சங்கப் பணத்தை அபகரித்து விட்டதாக கூறி கட்சியில் இருந்து நீக்கி வைத்திருந்தார். இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென திமுகவில் இணைந்துள்ளார் சின்னசாமி.

செங்கோட்டையன்
தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய கட்சி தாவல் என்றால் அது செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்றதுதான். எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவுக்கு வந்து ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவராக இருந்த செங்கோட்டையன் முதல்வராகும் வாய்ப்பை உதறிவிட்டு எடப்பாடிக்கு துணை நின்றவர். அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் செங்கோட்டையனும் ஒருவர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத எடப்பாடி செங்கோட்டையனின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்டவற்றையும் பறித்தார். தொடர்ந்து அவர் திமுகவுக்கு செல்ல போவதாக யூகங்கள் பரவி வந்த நிலையில் திடீரென தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு அடுத்த நாளே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். மிகப்பெரிய இயக்கமான அதிமுகவின் சீனியர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வந்திருப்பதால் மகிழ்ச்சி அடைந்த விஜய் அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர். பதவி கொங்கு மண்டல அமைப்பாளர் பதவி ஆகியவற்றை வழங்கியிருக்கிறார்.

நாஞ்சில் சம்பத்
திராவிட இயக்க பேச்சாளர்கள் வைகோவுக்கு இணையாக பிரச்சார பீரங்கியாக செயல்பட்டவர் நாஞ்சில் சம்பத். திமுகவிலிருந்து வைகோ விலகிய போது அவரது வலதுகரமாக செயல்பட்டவர். 15 மணி நேரம் ஆனாலும் வரலாற்று தரவுகளோடு பேசும் திறன் நாஞ்சில் சம்பத்துக்கு உண்டு. அதே நேரத்தில் வைகோவுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமமுகவில் இணைந்த நாஞ்சில் சம்பத் அதற்குப் பிறகு திமுக ஆதரவாளராகவே மேடைகளில் பேசுவார். கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் ஆதரவு நிலைப்பாட்டால் திமுக நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கப்பட்ட நாஞ்சில் சம்பத் தன்னை தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்து கொள்ள வேண்டும் என வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தார். இதை ஏற்ற விஜய் நாஞ்சில் சம்பத்தை சமீபத்தில் தான் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்த்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இப்படி 2025ல் கட்சி தகவல்களும் கட்சித் தாவும் தலைவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகவே இருந்தது வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்க கூடும் இது சமீபத்திய முக்கிய அரசியல் தலைவர்களின் கட்சி தாவல் நடவடிக்கைதான் உங்களுக்கு யாராவது தெரிந்திருந்தால் அவர்கள் குறித்து கமெண்ட் செய்யலாம்..












Click it and Unblock the Notifications