சொந்த நண்பர்களே வெறிச்செயல்.. பீகார் குடும்பம் கொலையில் திருப்பம்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி!
சென்னை: சென்னை பாலிடெக்னிக் கல்லூரியில் பணியாற்றி வந்த இளைஞர் கவுரவ் குமாரின் குடும்பம் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரின் நண்பர்கள் உட்பட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 2 வயது ஆண் குழந்தையின் சடலம் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மனைவி முனிதா குமாரியின் சடலத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜனவரி 26ஆம் தேதி அடையாறு இந்திரா நகர் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் சாக்கு மூட்டையில் கண்டறியப்பட்டது. இதில் இருந்து இரத்தம் வழிந்த நிலையில், உடனடியாக அப்பகுதியினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாக்கு மூட்டையில் இருந்த ஆண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன்பின் போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட இளைஞர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ் குமார் என்பது தெரிய வந்துள்ளது. அவர் சென்னை தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். அங்கேயே தனது மனைவி முனிதா குமார் மற்றும் 2 வயது மகனுடன் வசித்து வந்தது தெரிய வந்துள்ளது.
இதன்பின் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இளைஞர்கள் 2 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து சாக்கு மூட்டையை தூக்கி வீசி சென்ற வீடியோ போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதனடிப்படையில் கவுரவ் குமாரின் நெருங்கிய நண்பர் உட்பட 7 பேரை போலீசார் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையின் போது கவுரவ் குமாரின் மனைவி முனிதா குமாரி மற்றும் 2 வயது குழந்தையையும் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து போலீசார் விசாரணையில் கிடைத்த தகவல் அடிப்படையில் 2 வயது குழந்தையின் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர். ஆனால் இதுவரை கவுரவ் குமாரின் மனைவி உடல் கிடைக்கவில்லை. அடையாறு கெனல் ரோடு, கூவம் ஆற்றங்கரை, பெருங்குடி குப்பை கிடங்கு உள்ளிட்ட இடங்களில் போலீசார் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது ஏற்பட்ட மோதலில், ஒரு குடும்பத்தையே கொலை வெறியுடன் அந்த கும்பல் தீர்த்து கட்டி இருக்கிறது. அதேபோல் முனிதா குமாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான். மொத்தமாக 9 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதனடிப்படையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிக்கந்தர், நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாகூர், பிகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications