ஹோலிக்காக வெளியேறிய வடமாநில தொழிலாளர்கள்.. கோவை, திருப்பூரில் பீகார் அதிகாரிகள் இன்று ஆய்வு
கோவை மற்றும் திருப்பூரில் பீகார் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்கின்றனர்
சென்னை: வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு வந்துள்ள பீகார் மாநில அதிகாரிகள் குழுவினர் இன்று கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சோஷியல் மீடியாக்களில் இரண்டு வீடியோக்கள் வேகமாக பரவின. பீகாரில் இந்த வீடியோ பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அம்மாநில எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக, "தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. ஆனால் இதனை தடுக்காமல் பீகார் மாநில அரசு, தமிழ்நாடு அரசுடன் கைகோர்த்து வேடிக்கை பார்க்கிறது" என்று இரண்டு வீடியோகளை ஆதாரமாக காட்டி அமளியை கிளப்பினர்.
இந்த இரண்டு வீடியோவில் ஒன்று, பீகார்-ஜார்க்கண்ட் தொழிலாளர்கள் மோதல் சம்பவம். மற்றொன்று தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்குள் நடத்திக்கொண்ட சண்டை. ஆகவே இந்த வீடியோக்கள் தவராக பரப்பப்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு காவல்துறை விளக்கமளித்தது. ஆனால் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத உத்தரப் பிரதேச பாஜக செய்தி தொடர்பாளர் உமாராவ் டிவிட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்து தமிழர்-வடஇந்தியர் மோதல் என்று கூறியிருந்தார்.

வட மாநில இளைஞர்கள்
இதனையடுத்து அவர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது. அதேபோல, பீகார் மாநிலத்தின் அதிகாரிகள் குழு தமிழ்நாட்டில் ஆய்வு மேற்கொள்ளும் என்று அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்தார். இந்த குழுவானது நேற்று தமிழ்நாடு வந்து சேர்ந்தது. இக்குழு தமிழக அதிகாரிகளுடன் நேற்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை மேற்கொண்டது. பின்னர் பேட்டியளித்த குழுவின் தலைவரும் பீகார் மாநிலதத்தின் அரசு துறை செயலாளர் பாலமுருகன், "போலி வீடியோ காரணமாக தொழிலாளர்கள் மத்தியில் ஏகப்பட்ட சந்தேகங்கள் வந்துள்ளன. இவற்றை போக்குவது முக்கியமாகும். எனவே இது தொடர்பாக நடைபெற்ற பேச்சு வார்த்தை திருப்தியளிக்கும் வகையில் இருக்கிறது" என்று கூறினார்.

ஆய்வு
மேலும், "இந்த வீடியோவால் கோவை மற்றும் திருப்பூரில் வசித்து வரும் பீகார் மாநில தொழிலாளர்கள்தான் அதிக அளவு அச்சமடைந்துள்ளனர். எனவே அவர்களிடம் இன்று கலந்துரையாட இருக்கிறோம். ஏற்கெனவே இந்த பகுதிகளுக்கு ஜார்க்கண்ட் அதிகாரிகள் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதில் முடிவுகள் திருப்திகரமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்த போலி வீடியோக்கள் குறித்து மாவட்டம் தோறும் தொழிலாளர் நலத்துறை சார்பில் கூட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். அதேபோல இந்த வீடியோக்களை நம்பக்கூடாது என்று விழிப்புணர்வு வீடியோ காட்சிகளை வெளியிட இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

திருப்தி
இந்த கூட்டத்திற்கு பின்னர் பேட்டியளித்த தமிழக பொதுத்துறை செயலாளர் டி.ஜகந்நாதன், "தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இங்கு அவர்களுக்கு எந்த பிரச்னையும் கிடையாது. இந்த போலி வீடியோ விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு பீகார் அரசு நன்றி தெரிவித்திருக்கிறது. பீகார் மாநில தலைமை செயலாளர், தமிழ்நாட்டின் தலைமை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனது நன்றியை கூறியுள்ளார். அரசு அதிகாரிகள் மட்டுமல்லாது வணிகர் சங்கத்தினர், ஹோட்டல் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் பீகார் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

கண்டனம்
இந்த கலந்துரையாடலில் முழுமையான திருப்தி ஏற்பட்டுள்ளதாக பீகார் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கிடையில் நேற்று இந்த வீடியோக்க்ள குறித்து முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். "இது போன்று வதந்தி பரப்புவோர்கள் இந்திய நாட்டிற்கும், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் எதிரானவர்கள். சமூக ஊடகங்களில் இப்படி கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது" என்று சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications