Bihar SIR: பீகார் வாக்காளர் நீக்கம்! "நெருப்புடன் விளையாடாதீர்கள்!" முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
சென்னை: பீகார் சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கையைக் கைவிட வேண்டும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சிகளைத் தோற்கடிக்க முடியாததால், வாக்காளர்களை நீக்கும் முயற்சி நடக்கிறது என்றும் அனைத்து ஜனநாயக ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்த அநீதியை எதிர்த்துப் போராடுவோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். பீகாரில் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையம் வாக்காளர் திருத்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அங்குத் தேர்தல் களம் மெல்லச் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அதேநேரம் பீகாரில் தேர்தல் ஆணையம் "சார்" எனப்படும் சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. போலி வாக்காளர்களை நீக்கும் முயற்சியாக இதைச் செய்வதாகத் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
இருப்பினும், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாஜகவுக்குச் சாதகமாகவே தேர்தல் ஆணையம் இதைச் செய்வதாக எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றன. இது தொடர்பாக சுப்ரீம் கோர்டிலும் வழக்கு தொடரப்பட்டன. இருப்பினும், இந்த நடைமுறைக்குத் தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. தேர்தல் ஆணையம் இந்தச் சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இதுவரை சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இறப்பு, ஒரே நபர் இரு இடங்களில் பதிவு செய்துள்ளது உள்ளிட்ட காரணங்களால் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கைக்கு எதிரான போராட்டங்களை ஆரம்பித்துள்ளன.
முதல்வர் ஸ்டாலின்
இதற்கிடையே பீகார் சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சிகளைத் தோற்கடிக்க முடியாததால், வாக்காளர்களை நீக்கும் முயற்சி நடக்கிறது என்றும் அனைத்து ஜனநாயக ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்த அநீதியை எதிர்த்துப் போராடுவோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், இது ஒரு மாநிலம் சார்ந்த விவகாரம் மட்டுமல்ல: குடியரசின் அடித்தளம் தொடர்பானது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் நடவடிக்கை
ஜனநாயகம் என்பது மக்களுக்குச் சொந்தமானது என்றும் அதை யாராலும் திருடிவிட முடியாது என்றும் முதல்வர் ஸ்டாலின் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சமூகத்தில் நலிந்த பிரிவினரையும், மாறுபட்ட கருத்துடைய வாக்காளர்களையும் நீக்கும் நோக்கத்துடன், சிறப்புத் தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கை (SIR) தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. பாஜகவுக்குச் சாதகமான சூழலை உருவாக்கும் முயற்சியாகவே இது உள்ளது. இது சீர்திருத்தம் என்ற பெயரில் திட்டமிட்டுச் செய்யப்படும் அரசியல் நடவடிக்கை.
பீகாரில் நடந்த நிகழ்வுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. ஒரு காலத்தில் தங்களுக்கு வாக்களித்த மக்கள் இப்போது வாக்களிக்க மாட்டார்கள் என்பது டெல்லிக்கு தெரிந்துவிட்டது. இதன் காரணமாகவே அவர்களை வாக்களிக்க விடாமல் தடுக்க முயற்சிகள் நடக்கின்றன.
நெருப்புடன் விளையாடாதீர்கள்
எங்களை (எதிர்க்கட்சிகள்) தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்தே மக்களை நீக்க நினைக்கிறார்கள். நெருப்புடன் விளையாடாதீர்கள்.. இது ஜனநாயகத்திற்கு எதிரான அச்சுறுத்தல். இந்த நடவடிக்கைக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவிப்போம்.
தமிழகம் இந்த அநீதிக்கு எதிராக முழு பலத்துடன் குரல் கொடுக்கும். ஜனநாயக ரீதியிலான அனைத்து வழிகளையும் பயன்படுத்தி இதனை எதிர்த்துப் போராடுவோம். இது ஒரு மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல, நம் குடியரசின் அடிப்படையையே அசைக்கும் முயற்சி. ஜனநாயகம் மக்களுக்கானது, அது ஒருபோதும் திருடப்படாது" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications