இதுதான் தமிழ்நாடு மாடல்.. இங்கே மட்டும் கல்வி எப்படிங்க சிறப்பா இருக்கு? பீகார் டீம் நேரில் ஆய்வு!
சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வி திட்டங்கள் குறித்து பீகார் மாநில கல்வித்துறை அதிகாரிகள் 250 பேருக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக பேர் கல்லூரி சேர்க்கிறார்கள். பள்ளி படிப்பை முடிப்பவர்களில் மொத்தம் 49% பேர் தமிழ்நாட்டில் கல்லூரியில் சேர்க்கிறார்கள். அதாவது மத்திய அரசு 2035க்கு வைத்த இலக்கை நாம் 2019லேயே தொட்டுவிட்டோம். மற்ற மாநிலங்கள் எல்லாம் இதில் அதள பாதாளத்தில் இருக்கிறது.

மற்ற மாநிலங்களின் நிலை என்று பார்த்தால் கல்வியில் முன்னிலை வகிக்கும் கேரளாவில் ஜிஇஆர் 37% ஆக உள்ளது. அது போக டெல்லியில் அதிகமாக ஜிஇஆர் 46.3% ஆக இருக்கிறது. தெலுங்கானாவில் இது 36.2% ஆக இருக்கிறது. ஆந்திர பிரதேசத்தில் இது 32.4% ஆக இருக்கிறது. மகாராஷ்டிராவில் ஜிஇஆர் சதவிகிதம் 32 ஆக உள்ளது. கர்நாடகாவில் இது வெறும் 28%தான்.
இந்தியாவின் மொத்த ஜிஇஆர் சதவிகிதம் 28%தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இருக்கும் மாநிலங்களை தமிழ்நாடு முந்தியது மட்டுமின்றி பல வல்லரசு நாடுகளையும் தமிழ்நாடு இதில் முந்தி இருக்கிறது.
சீனாவின் ஜிஇஆர் சதவிகிதம் 43% ஆனால் தமிழ்நாட்டில் சதவிகிதம் 49. மலேசியாவின் ஜிஇஆர் சதவிகிதம் 45%. பஹ்ரைனின் ஜிஇஆர் சதவிகிதம் 47%. இப்படி வளர்ந்த நாடுகளை விட தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது.
இடைநிற்றலை தவிர்க்க திட்டங்கள்: இடைநிற்றலை தவிர்க்க தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்கள் இதற்காக கொண்டு வரப்பட்டு உள்ளன. உதாரணமாக 2022-23 கல்வியாண்டில், 3,23,456 மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து 12 ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 2,40,460 பேர் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கப் பள்ளிகளில் உள்ள நான் முதல்வன் தொழில் பிரிவுகளால் வசதி செய்யப்பட்டது.
மீதமுள்ள மாணவர்கள் மாவட்டம் வாரியாக அடையாளம் காணப்பட்டு, மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ், அவர்கள் உயர்கல்வியைத் தொடரச் செய்யும்வகையில் "உயர்வுக்குப் படி" என்ற முன்முயற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசுத் துறைகள், வங்கிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கு விரிவான சேர்க்கை வாய்ப்புகளை வழங்குவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் கீழ், மாணவர்களின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், ஒவ்வொரு வருவாய்க் கோட்டத்திலும் இரண்டு கட்டங்களாக இந்த முயற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பீகார் பயிற்சி; இந்த நிலையில்தான் தமிழ்நாடு பள்ளிக்கல்வி திட்டங்கள் குறித்து பீகார் மாநில கல்வித்துறை அதிகாரிகள் 250 பேருக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
3 கட்டமாக நடந்த பயிற்சியை 117 அதிகாரிகள் முடித்துள்ளனர். வரும் 25ம் தேதி வரை மீதமுள்ள அதிகாரிகளுக்கு பயிற்சி நடக்க இருக்கிறது. தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி திட்டங்கள் மற்றும் உயர்கல்வி திட்டங்கள் எப்படி செயல்படுகிறது, எப்படி தமிழ்நாட்டில் கல்வி சிறப்பாக உள்ளது, தமிழ்நாட்டில் மட்டும் உயர்கல்வி சேர்ப்பு அதிகம் இருக்கிறது என்பதை கண்டறியவும் அது தொடர்பான பயிற்சிகளை பெறவும் பீகார் குழு தமிழ்நாட்டில் வந்துள்ளது.












Click it and Unblock the Notifications