வயிறு, கால் வீங்கி! திரவம் கசிந்து படுத்த படுக்கையான பிஜிலி ரமேஷ்! அவரது உடல்நிலைக்கு என்ன ஆச்சு?
சென்னை: வயிறு வீங்கி, கால்கள் வீங்கி, முகமெல்லாம் கருத்து போய் படுத்த படுக்கையாக இருந்த நடிகர் பிஜிலி ரமேஷ், இறுதி நேரம் முழுக்க தனது மகனுக்கு எதையும் செய்யாமல் போகிறோமே என்ற கஷ்டத்துடனே இருந்தார்.
நட்பே துணை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிஜிலி ரமேஷ். இவர் கடந்த 9 மாதங்களாக நோய்வாய்ப்பட்டு அவ்வப்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று அதிகாலை மரணமடைந்தார்.

பிஜிலி ரமேஷின் உடல்நிலை குறித்து மனைவி நியூஸ் கிளிட்ஸ் சேனலுக்கு அண்மையில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அவருக்கு கல்லீரல் பாதிப்பு இருக்கிறது. காலில் வீக்கம் இருக்கிறது. அது போல் வயிறும் வீங்கி இருக்கிறது. இந்த முறை அவர் பிழைப்பது கஷ்டம் என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்.
நானும் என் குடும்பத்தினரும் ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்களிடம் கெஞ்சினோம். "எப்படியாவது அவரது உயிரை காப்பாற்றி கொடுங்கள்" என்று! ஆனால் அவர்களோ "உடலில் நிறைய பிரச்சினை இருக்கிறது. நிச்சயம் இந்த முறை காப்பாற்ற முடியாது. ஆனாலும் எங்களால் முயன்றதை செய்வோம்" என்றனர்.
15 நாட்கள் பிஜிலி ரமேஷுக்கு ஸ்டான்லியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த முறை சாப்பாடும் குறைந்துவிட்டது. ஏதோ கொஞ்ச நஞ்சம் சாப்பிட்டுக் கொண்டிருந்ததும் இப்போது குறைந்துவிட்டது. ஜூஸ் நிறைய கொடுக்க வேண்டாம். ஜூஸ் குடிக்க குடிக்க வயிற்றில் நீர் சேர்ந்துவிடும்.
கல்லீரல் ஆபரேஷன் செய்ய வேண்டும் என டாக்டர்கள் சொன்னார்கள். ஆனால் இந்த உடம்பு தாங்காது என்பதால் நாங்கள் அதையெல்லாம் செய்யவில்லை. அவரது உடல் எடை 45 கிலோதான் இருந்தது. ஆனால் வயிறு, கால் எல்லாம் வீங்கியதில் அவரது உடல் எடை 75, 80 கிலோ என ஆனது.
அவ்வப்போது அவருக்கு ஞாபக மறதி ஏற்படுகிறது. இதை டாக்டர்களே சொல்லிவிட்டார்கள். நன்றாகத்தான் இருந்தார். திடீரென மூச்சு இரைத்தது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு எல்லாரையும் கடித்தார், அடித்தார், இயற்கை உபாதைகள் கூட கழிக்க முடியவில்லை. உடனே ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.
அங்கு மூக்கில் டியூப் விட முயற்சித்ததால் ரத்தம் வந்துவிட்டது. குடியை விட்டுவிட்டு குடும்பத்தை பாருங்கள் என இந்த வீடியோவை பார்ப்போருக்கு நான் கூறுகிறேன். ஜூலை மாதம் எல்லாம் நன்றாக சாப்பிட்டவர், திடீரென படிப்படியாக சாப்பாடு குறைந்துவிட்டது. டிசம்பர் 14 ஆம் தேதி முதல் இவர் உடல்நிலை அவ்வப்போது பாதித்துதான் இருந்தது என்றார்.
இதுகுறித்து பிஜிலி ரமேஷ் கூறியதாவது: என் உடல்நிலை தெரிஞ்சி போச்சு. ஓடும் வரை இந்த குதிரை ஓடும். அந்த குதிரை எப்போது நிற்கும் என தெரியாது. குடிப்பவர்களுக்கு அறிவுரை கூறும் தகுதியை நான் இழந்துவிட்டேன். என் மகனை நினைத்தால்தான் கஷ்டமாக இருக்கிறது. மரத்த வச்சவன் தண்ணீர் ஊத்துவான் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நான் சாகுறதுக்குள் ரூ 10 லட்சம் சம்பாதித்து கொடுத்தால் போதும். அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள். ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்றுதான் ஆசையாக இருந்தது. எனக்கு யாராவது வாய்ப்பு கொடுக்க தயாராக இருந்தாலும் , "அவருக்கு உடல் போய்விட்டது, அவரை கூப்பிட்டாதீங்க"னு சொல்ற கூட்டம் இருக்கிறார்கள். இவ்வாறு பிஜிலி ரமேஷ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications