திருட தெரியாமல்.. சென்னையில் வசமாக சிக்கிய வடமாநில இளைஞர்கள்! பைக் திருட்டில் நடந்த ட்விட்ஸ்
சென்னை: பிழைப்பு தேடி வரும் வடமாநில மக்களை, தமிழகம் வாழ வைத்து வருகிறது. ஆனால், இப்படி வருபவர்களில் சிலர் கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பைக் திருட்டில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் இருவர் போலீசில் சிக்கியிருக்கிறார்கள். அவர்கள் எப்படி சிக்கினார்கள் என்பதுதான் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.
சென்னை தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்(23). இவர் தாம்பரம் சண்முகம் சாலை, காமராஜர் தெருவில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். காலையில் வேலைக்கு போனால், இரவுதான் வீட்டிற்கு வருவார். கடந்த 12ம் தேதியும் இவர் வழக்கம் போல வேலைக்கு சென்றிருக்கிறார். மருந்தகத்திற்கு வெளியே கொஞ்சம் தள்ளி பைக்கை நிறுத்தி வைத்திருக்கிறார். இரவு வீடு திரும்ப கடையை பூட்டிவிட்டு வந்து வாகனத்தை தேடியிருக்கிறார். ஆனால் அங்கு பைக் இல்லை.

பைக் திருட்டு
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக சிசிடிவி கேமராக்களை செக் செய்திருக்கிறார். அதில், யார் என்றே தெரியாத இரண்டு நபர்கள் தனது பைக்கை ஓட்டிக்கொண்டு செல்வது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து போலீசில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் பெயரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்திருக்கின்றனர். என்னதான் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினாலும் பைக்கை கண்டுபிடிக்க சில நாட்கள் வரை ஆகும். எனவே வேலைக்கு போக ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பைக்கை வாங்க யோசித்திருக்கிறார் விக்னேஷ்.
திருடியவரிடம் விற்க முயன்ற கொள்ளையர்கள்
இதற்காக பழைய பொருட்களை விற்கும் ஆன்லைன் வெப்சைட்டில் கடந்த 14ம் தேதி பைக்குகளை தேடியிருக்கிறார். அதில் இவருடைய பைக் விற்பனைக்கு என பதிவேற்றப்பட்டிருக்கிறது. இதை பார்த்து அதிர்ந்து போன விக்னேஷ் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். பின்னர் போலீசாரின் அறிவுறுத்தலின்படி, பைக் தேவை என்று குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். பதிலுக்கு கொள்ளையர்கள் தரப்பிலிருந்தும் மெசேஜ் வந்திருக்கிறது.

சொந்த பைக்குக்கு ரூ.50 ஆயிரம்
பைக்கின் விலை ரூ.50 ஆயிரம், விலையில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார்கள். விலை ஓகே எங்கு வந்து பைக்கை வாங்கி கொள்வது? என்று விக்னேஷ் மெசேஜ் அனுப்ப, பெருங்களத்தூரில் வந்த வாங்கிக்கொள்ள வேண்டும் என்று கொள்ளையர்கள் கூறியிருக்கிறார்கள். இதனையடுத்து, தாம்பரம் காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சிலம்பரசன் தலைமையில் விக்னேஷுடன் சென்றிருக்கின்றனர்.
இதுதான் வேலையே
பெருங்களத்தூரில் சொன்ன நேரத்திற்கு கொள்ளையர்கள் வரவே, மறைந்திருந்த போலீசார் கொள்ளையர்களை சுற்றிவளைத்து பிடித்திருக்கின்றனர். அவர்களிடம் விசாரித்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், தாம்பரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அலுவலகம் செல்வதை போல நடித்திருக்கிறார்கள். தினமும் காலையில் வீதி உலா வரும் இவர்கள், ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பைக்குகளை நோட்டம் விட்டு, நேரம் பார்த்து திருடிவிடுகின்றனர்.
இதை அப்படியே, பழைய பொருட்கள் விற்பனை செய்யப்படும் ஆன்லைன் சைட்டில் விற்றுவிடுகின்றனர். இதன் மூலம் வரும் வருவாயை கொண்டு வாழ்க்கையை நடத்தியிருக்கின்றனர். இப்படி ஏராளமான பைக்குகளை அவர்கள் திருடி விற்றிருக்கிறார்கள். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
வாழ வைக்கும் தமிழ்நாடு
தமிழ்நாட்டில் கல்வியறிவு பெற்ற மக்கள் அதிகம். எனவே கல்விக்கு ஏற்றால் போல வேலையை அவர்கள் தேடுகிறார்கள். இதனால் கல்வியறிவு அவசியமில்லாத பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இந்த வெற்றிடத்தை வடமாநில தொழிலாளர்கள் நிரப்புகின்றனர். வெயில், மழை, புயல் என எதையும் பாராமல் குறைந்த ஊதியத்திற்கு தொடர்ந்து வேலை பார்க்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் உருவான மிகப்பெரிய கட்டிடங்கள், சாலைகள், பெரிய பெரிய கட்டுமானங்களில் வடமாநில தொழிலாளர்களின் உழைப்பு இருக்கிறது.

ஆனால், மறுபுறம் உழைக்கும் தொழிலாளிகள் என்கிற போர்வையில் ஊருக்குள் வரும் சிலர், சட்டவிரோத செயல்களில் அதிகம் ஈடுபடுகின்றனர். அப்படித்தான் மகாராஷ்டிராவை சேர்ந்த ஆதித்யா(23) மற்றும் சாகர்(21) இருவரும் சட்டவிரோத செயல்களில் சிக்கி போலீசிடம் சிக்கியிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications