சைதை சாதிக்கை கண்டித்து பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டம்.. அண்ணாமலை கைதால் பரபரப்பு
சென்னை: சென்னையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜகவில் நடிகைகள் குஷ்பு, கவுதமி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோர் உள்ளனர். இவர்களை சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேச்சாளர் சைதை சாதிக் என்பவர் அவதூறாக விமர்சித்திருந்தார்.
அந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகைகளை டபுள் மீனிங்கில் விமர்சித்திருந்தார். இதுகுறித்து திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழியையும் முதல்வர் ஸ்டாலினையும் டேக் செய்து குஷ்பு புகார் கூறினார்.

குஷ்பு ட்வீட்
இதகுறித்து குஷ்பு தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது: ஆண்கள் பெண்களை தவறாகப் பேசுவது, அவர்கள் வளர்க்கப்பட் விதத்தையும் அவர்கள் வளர்ந்த மோசமான சூழலையும் காட்டுகிறது. இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். இது போன்ற ஆண்கள் தங்களை கலைஞரை பின்பற்றுபவர்கள் என அழைத்துக் கொள்கிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் தலைமையின் கீழ் இதுதான் புதிய திராவிட மாடலா? என குஷ்பு கேள்வி எழுப்பியிருந்தார். குஷ்புவின் இந்த ட்வீட்டிற்கு கனிமொழி பதிலளித்துள்ளார். அவர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது: ஒரு பெண்ணாகவும் மனிதராகவும் இதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். இதை யார் செய்திருந்தாலும் சொன்ன இடம் அல்லது அவர்கள் சார்ந்த கட்சி எதுவாக இருந்தாலும் இது எக்காரணத்தை கொண்டும் சகித்துக் கொள்ள முடியாதது.

மன்னிப்பு
இதற்காக என்னால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்க முடிகிறது. எனது தலைவர் ஸ்டாலினுக்கும் எனது கட்சியான திமுகவுக்கும் இது ஒரு போதும் ஏற்புடையது இல்லை என தெரிவித்துள்ளார். இதற்கு குஷ்பு நன்றியும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பாஜகவில் உள்ள பெண்களைத் திமுக கண்ணியக்குறைவாக பேசுவதாகக் கூறி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்றைய தினம் பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அண்ணாமலை கைது
இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். ஆனால் இதில் வானதி, குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொள்ளவே இல்லை. இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர். அப்போது திமுகவுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications