அந்த கட்டுல எல்லாமே ஜோக்கர்தான்.. பாஜக அண்ணாமலையை மட்டும் மாத்திடாதீங்க.. டக்னு சொன்ன கரு.பழனியப்பன்
சென்னை: மு.க.ஸ்டாலின் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் சொல்லலாம். முதுகெலும்புள்ள களப்போராளி ஸ்டாலின் என்றும் சொல்லலாம். அவரது முதுகெலும்பு வெறும் எலும்புகளால் ஆனது அல்ல. ஏனென்றால் மிசா சட்டத்தில் சிறையில் பூட்ஸ் காலில் மிதிபட்டு, தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கையாலும், பேரறிஞர் அண்ணாவின் எதையும் தாங்கும் இதயத்தாலும், கலைஞரின் நெஞ்சுக்கு நீதியாலும் ஆனது" என்று நடிகர் சத்யராஜ் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, "மக்கள் முதல்வரின் மனிதநேய விழா" என்ற தலைப்பில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் "சூரிய மகள் 2025" என்ற தலைப்பில் மகளிருக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி, ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையிலும், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஏற்பாட்டிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் சூரிய மகள் விருதுகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், நடிகர்கள் சத்யராஜ் மற்றும் பிரபு ஆகியோர் வழங்கினர்.
கரு.பழனியப்பன் பேச்சு
இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கரு.பழனியப்பன் , "2 அமைச்சர்களும் அரசியல் பற்றி பேசாமல், இந்த ஆட்சியின் சாதனைகளை பற்றி பேசினார்கள். முதலமைச்சரின் திட்டங்களை பற்றி பேசினார்கள். அது தான் மனிதனுக்கு கிடைக்கின்ற மிக சிறந்த பாராட்டு என்று நினைக்கின்றேன்.
திமுக ஆட்சியில் நூலகம் கட்டினார்கள். முதலில் சென்னை நூலகத்திற்கு அண்ணாவின் பெயர், மதுரையில் நூலகம் கட்டி கலைஞர் பெயர், கோவை நூலகத்திற்கு பெரியார் பெயர் வைத்துள்ளனர்.
அரசியல் எதிரி விஜய்
ஆனால் திருச்சியில் உள்ள நூலகத்திற்கு எதற்காக காமராஜர் பெயர் வைக்க வேண்டும்? ஏனென்றால், விஜய் என்னுடைய எதிரி திமுக தான் என்று சொன்னார். அதை முதல் முதலில் 1958ல் சட்டசபையில் என்னுடைய ஒரே எதிரி திமுக தான் என்று காமராஜர் சொன்னார். அப்போது யார் எதிரியாக நினைத்தார்களோஅவர்களின் பெயரை வைத்து மகிழ்ந்த கட்சி தான் திமுக.
கூட்டணி பற்றி ரகசியமாக பேசிவிட்டு கேட்டால் நாங்கள் சும்மாதான் போயிட்டு வந்தோம் என்கிறார்கள். ஆனால் அமித்ஷாவோ கூட்டணியை பற்றி பேசினோம் என்று சொல்கிறார். நமக்கு இருக்குற ஒரே காமெடி அண்ணாமலை. அவரையும் மாத்திடாதீங்க.. அந்தக் கட்டுல எல்லாமே ஜோக்கர்தான்"என்றார்.
முதுகெலும்புள்ள களப்போராளி
முன்னதாக இந்த விழாவில் நடிகர் சத்யராஜ் பேசும்போது, "சூரியமகள் கையில் புத்தகம் வைத்திருப்பது போன்ற சிலை உள்ளது. பெண் விடுதலை வேண்டுமென்றால் கையிலுள்ள கரண்டியினை பிடுங்கி விட்டு புத்தகத்தை கொடுங்கள் என்றார் பெரியார்..
மு.க.ஸ்டாலின் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் சொல்லலாம். முதுகெலும்புள்ள களப்போராளி ஸ்டாலின் என்றும் சொல்லலாம். அவரது முதுகெலும்பு வெறும் எலும்புகளால் ஆனது அல்ல. ஏனென்றால் மிசா சட்டத்தில் சிறையில் பூட்ஸ் காலில் மிதிபட்டு, தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கையாலும், பேரறிஞர் அண்ணாவின் எதையும் தாங்கும் இதயத்தாலும், கலைஞரின் நெஞ்சுக்கு நீதியாலும் ஆனது" என்றார்.












Click it and Unblock the Notifications