டிஆர் பாலு வழக்கு.. சைதை நீதிமன்றத்தில் அண்ணாமலை நாளை ஆஜர்.. கடந்த முறை நடந்த மறக்க முடியாத சம்பவம்
சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இரண்டாவது முறையாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நாளை நேரில் ஆஜராகிறார்.
தமிழ்புத்தாண்டு நாளான ஏப்ரல் 14ம் தேதி தி.மு.க.விரின் சொத்துப் பட்டியல்களை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அண்ணாமலை வெளியிட்ட பட்டியலில் திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலுவின் பெயரும் இடம் பெற்று உள்ளது. டிஆர் பாலு ஊழல் செய்து கோடிகளில் சொத்து சேர்த்ததாக அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த டிஆர் பாலு அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினர். மேலும், அண்ணாமலை மீது வழக்குத் தொடரப்போதவதாகவும் அறிவித்தார் அதன்படி, திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை பெருநகர 17-வது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
டிஆர் பாலு தனது மனுவில், 1957ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து, எம்.பி.யாகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ள தனக்கு பொதுமக்கள் மத்தியில் நற்பெயரும் மரியாதையும் உள்ளது. அதை களங்கப்படுத்தும் விதமாக அண்ணாமலை அவதூறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார் என குற்றம்சாட்டி இருந்தார் டி.ஆர்.பாலு.
இந்த மனு மாஜிஸ்திரேட்டு அனிதா ஆனந்த் முன் கடந்த மே மாதம் விசாரணைக்கு வந்தபோது தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு ஆஜராகி பிரமாண வாக்குமூலம் அளித்தார். இந்நிலையில் வழக்கு கடந்த ஜூன் 15ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டிஆர் பாலு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எங்கள் குடும்பத்தினர் 21 நிறுவனங்களில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
பொய்யான குற்றச்சாட்டை கூறி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அண்ணாமலை எனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். இதுதவிர அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இருந்தார். இதையடுத்து, இவ்வழக்கு விசாரணைக்கு ஜூலை (14-ம் தேதி) நேரில் ஆஜராகும்படி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது. இதைத் தொடர்ந்து, நீதிமன்ற ஆணைக்கிணங்க சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று அண்ணாமலை ஆஜரானார் . அப்போது அவருக்கு வழக்கின் நகல் வழங்கப்பட்டது.
அதன்பிறகு இரண்டு முறை வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இரண்டு முறையும் அண்ணாமலை ஆஜராகவில்லை. அவருக்கு பதில் அவரது வழக்கறிஞர் தான் ஆஜரானார். இந்நிலையில் டிஆர் பாலுவின் வழக்கில், நாளை மாலை 4 மணி அளவில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். அண்ணாமலை ஆஜராகும் போது, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் சமர்பிப்பார் என்று கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த முறை அண்ணாமலை ஆஜரான போது, ஏராளமான வழக்கறிஞர்கள் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு வந்தனர். தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் வந்தனர். இதனால் சென்னை சைதாப்பேட்டை கவர்னர் மாளிகை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications