களை எடுப்பு தொடங்கியது.. விடாத அண்ணாமலை.. அடுத்தடுத்து நீக்கப்படும் தலைகள்.. என்ன நடக்குது பாஜகவில்?
சென்னை: தமிழ்நாடு பாஜகவில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருகின்றனர். பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்தடுத்து பல நிர்வாகிகளை நீக்கி வருகின்றனர்.
கடந்த வாரம், சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் கல்யாணராமன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு மாநில தலைமையினை பற்றியும், கட்சிக்காக பணியாற்றுபவர்கள் மீதும் தகுந்த ஆதாரங்கள் இன்றி சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வருகிறார்.

இது கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயலாக இருப்பதால் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின்படி கல்யாணராமன் கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் 1 வருடத்திற்கு நீக்கப்படுகிறார் என்று அறிவிக்கப்பட்டது.
ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது, என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் நிர்வாகி நீக்கம்: அதேபோல் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளர் திருச்சி S.சூர்யா கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின் படி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது, என்றும் பாஜக சார்பாக அறிவிக்கப்பட்டது.
மாறி மாறி விமர்சனம்: அதில் கல்யாணராமன் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்தார். இன்னொரு பக்கம் திருச்சி சூர்யா தமிழிசை சௌந்தரராஜனை மிக கடுமையாக விமர்சனம் செய்தார். இவர்கள் இருவரும் இப்போது நீக்கப்பட்டு உள்ளனர்.
மீண்டும் நீக்கம்: தமிழ்நாடு பாஜகவில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருகின்றனர். பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்தடுத்து பல நிர்வாகிகளை நீக்கி வருகின்றார். தற்போது பாஜகவில் இருந்து மேலும் 3 பேர் நீக்கப்பட்டு உள்ளனர்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியில் கீழ்க்கண்ட மாவட்ட நிர்வாகிகள் அவர்கள் வகித்து வரும் கட்சியின் பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார்கள்.
நிர்வாகிகள் பெயர் பட்டியல்
S.பாஸ்கர் மாவட்ட தலைவர், திருவாரூர்
K.அகோரம் மாவட்ட தலைவர். மயிலாடுதுறை
C. செந்திலரசன் மாவட்ட பொது செயலாளர், திருவாரூர் ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர்.
களை எடுப்பு: தமிழ்நாட்டில் அண்ணாமலை - தமிழிசை சௌந்தரராஜன் இடையே மோதல் நிலவி வருகிறது. தமிழ்நாட்டின் பாஜக செயல்பாடு குறித்து மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார். அதில்., நான் கட்சிக்காக கடுமையாக உழைக்க கூடியவர். நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன். எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன். நான் இங்கேதான் இருப்பேன்.
ஆளுநர் பணியை விட்டு நான் ஏன் இங்கே பணிகளை செய்கிறேன் என்றும் சிலர் அப்படி இப்படி பேசுகிறார்கள். கட்சியினருக்கே கேட்கிறேன். ஆளுநர் பணியை விட்டு விட்டு வந்ததற்கு நானே கவலைப்படவில்லை. உங்களுக்கு என்ன கவலை?.
இன்னொன்று நாங்கள் எல்லாம் 2 இடம் வரக்கூடியவர்கள் இல்லை.. வியூகம் அமைத்து கூட்டணி அமைத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்.. தேர்தலில் வியூகம் அமைத்தால்தான் வெற்றி பெறலாம். தேர்தல் கூட்டணி என்பது வியூகம். நாங்கள் வெற்றிபெற கூடிய நபர்கள். ஆனால் இரண்டாம் இடம் வந்துவிட்டோம்.
அதிமுக - பாஜக வாக்கை சேர்த்து இருந்தால் வென்று இருப்போம். கூட்டணி என்றால் கட்சி மோசம் போய்விட மாட்டோம். கூட்டணி வைக்கலாம் என்று நாங்கள் வியூகத்தை அமைத்தோம்.. சகோதரர் அண்ணாமலைக்கு அதில் விருப்பம் இல்லை. அதனால் செய்யவில்லை. அண்ணாமலையிடம் அதை நீங்கள் கேட்கலாம். எனக்கு கருத்து இருந்தால் நான் சொல்வேன், என்றெல்லாம் தமிழிசை விமர்சனம் செய்து வருகிறார்.
இந்த மோதலின் தொடர்ச்சியாக பாஜக தலைவர் அண்ணாமலை களையெடுப்புகளை தொடங்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications