பாஜகவின் கனவு பலிக்கவில்லை.. பண பலமும் எடுபடவில்லை.. முதல்வர் ஸ்டாலின் விளாசல்
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளில் திமுக கூட்டணி போட்டியிட்ட நிலையில், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று கிளீன் ஸ்வீப் செய்துள்ளது. இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தின் போது 400 இடங்கள் என்று கூறி வந்த பாஜகவுக்கு இப்போது ஆட்சி அமைக்க கூட பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று பேசினார்.
2024 லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி சொல்லி அடித்தது போல 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக, பாஜகவை ஒரு இடத்தில் கூட வெற்றி பெற செய்யமுடியாமல் கிளீன் ஸ்வீப் செய்தது.

தமிழக பாஜக தலைவர் முன்பு ஒரு பேட்டியில் வரும் லோக்சபா தேர்தலில் தென் தமிழகத்தில் இருந்து ஒரு திராவிட கட்சி தலைவர்கள் கூட டெல்லி செல்ல மாட்டார் என்று பேசியிருந்தார். இந்த நிலையில் கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலையும் திமுகவிடம் தோல்வியை சந்தித்தார்.
இதேபோல் அதிமுகவும் இந்த லோக்சபா தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக விருதுநகர் தொகுதியில் மிகப்பெரிய ட்ஃப் கொடுத்தது. எனினும் திமுகவே வெற்றி பெற்றது. இந்த நிலையில் திமுக கூட்டணி புதுச்சேரியையும் சேர்த்து 40 தொகுதிகளில் போட்டியிட்டு 40 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இப்போது மேலும் ஒரு தொகுதியையும் சேர்த்து 40க்கு 40 வெற்றி பெற வைத்திருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள். திமுகவின் இந்த தேர்தல் வெற்றியை கருணாநிதிக்கு காணிக்கை ஆக்குகிறேன். இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் காக்க பணியாற்றுவோம்.
லோக்சபா தேர்தலில் பாஜகவின் கனவு பலிக்கவில்லை. பாஜகவின் பண பலம் தேர்தலில் எடுபடவில்லை. தேர்தல் பிரசாரத்தின் போது 400 இடங்கள் என்று கூறி வந்த பாஜகவுக்கு இப்போது ஆட்சி அமைக்க கூட பெரும்பான்மை கிடைக்கவில்லை.












Click it and Unblock the Notifications