Exclusive அண்ணாமலை ஒரு புத்திசாலி! திமுகவை நினைத்தால் பெரிய தமாஷ்! வி.பி.துரைசாமி ஓபன் டாக்!
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு புத்திசாலி என்றும் அவரிடம் வேலைபார்ப்பது தனக்கு மனநிறைவை தருகிறது எனவும் கூறுகிறார் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி.
திமுகவில் துணைப் பொதுச்செயலாளராக இருந்த இவர் ஸ்டாலினுடன் கட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றாக மேடையில் அமரும் வாய்ப்பை பெற்றிருந்தார்.
ராஜ்யசபா சீட் கேட்டு கிடைக்காத அதிருப்தியில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பாஜகவில் இணைந்தார். வி.பி.துரைசாமி இணைந்தபோது அவருக்கு பாஜகவில் முக்கியப் பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது அவரது அரசியல் பயணம் எப்படி போகிறது என்பதை அறிவதற்காக நாம் பேசினோம்.
அப்போது அவர் மனம் திறந்து பகிர்ந்துகொண்ட விவரம் பின்வருமாறு;

கேள்வி: பாஜகவில் இணைந்தபோது பரபரப்பாக பேசப்பட்ட நீங்கள், இன்று இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறீர்களே?
பதில்: பிரதமர் மோடியின் தூய்மையான நிர்வாகத்தை பார்த்து பாஜகவில் நான் சேர்ந்தேன். கட்சியின் சித்தாந்தமும் ஆட்சியின் சாதனையும் என்னை பாஜகவில் இணையவைத்தது. பாஜகவில் நான் சேர்ந்தால் எனக்கு இந்தப் பதவியை கொடுக்க வேண்டும் என பேரம் பேசவில்லை. பாஜக என்றில்லை இதற்கு முன்னர் திமுகவில் இருந்தபோதும் சரி, நான் எப்போதுமே அரசியல் பேரம் பேசியதில்லை. இப்போது பாஜகவில் மாநில துணைத் தலைவராக இருக்கிறேன், அதேபோல் கோர் கமிட்டி உறுப்பினராகவும் இருக்கிறேன். தலைமை சொல்லும் வேலையை தட்டாமல் செய்து வருகிறேன். எனக்கு எப்போது எதை கொடுக்க வேண்டும் என தலைமைக்கு தெரியும், அதனால் அதைப்பற்றி எந்த வருத்தமும் இல்லை.
கேள்வி: மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் நூற்றுக்கணக்கான பதவிகள் உள்ளதே, ஒரு பதவிக்கு கூடவா நீங்கள் பொருத்தம் இல்லாமல் போய்விட்டீர்கள்?
பதில்: கொடுப்பதற்கான வாய்ப்பு அதிகம், நிச்சயம் கொடுப்பாங்க.
கேள்வி: உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: திமுகவை நினைத்தால் பெரிய தமாஷாக இருக்கிறது. உங்களுக்கு ஒரு சிறிய உதாரணத்தை கூறுகிறேன், பேராசிரியர் அன்பழகன் எவ்வளவு பெரிய மனிதர், அவருக்கு வைத்திருக்கக் கூடிய சிலையை தேட வேண்டியது உள்ளது. அதேபோல், பேராசிரியர் அன்பழகனுக்கு நேற்று முன் தினம் நூற்றாண்டு பிறந்தநாள் விழா. இதை கட்சியில் எப்படி சிறப்பாக கொண்டாடியிருக்க வேண்டும், கொண்டாடினார்களா, இல்லையே. இதே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா எப்படி நடந்தது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. பேராசிரியர் அன்பழகனுக்கு இவ்வளவு தான் மரியாதையா எனப் பார்த்தால் எனக்கு மிகுந்த வருத்தமாக உள்ளது. இதனால் உதயநிதி அமைச்சராகனும்னு சில அமைச்சர்கள் தான் கூறி வருகிறார்களே தவிர மக்கள் அல்ல.
கேள்வி: அதிமுகவில் உட்கட்சி ரீதியாக பனிப்போர் தொடரும் சூழலில், பாஜக அமைக்கும் கூட்டணி எந்தளவு தேர்தலில் கைகொடுக்கும்?
பதில்: அதிமுகவில் என்ன நடக்கிறது என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆனால் அதைப்பற்றியெல்லாம் இங்கு பேசுவது முறையாக இருக்காது. நாங்கள் கூட்டணியில் ஒரு பங்குதாரர் மட்டுமே. அதனால் அனைவரையும் அணுசரித்து சென்று தேர்தலை சந்திப்போம்.
கேள்வி: தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி பாஜக என்ற தோற்றத்தை உருவாக்குகிறாரோ அண்ணாமலை?
பதில்: அண்ணாமலை ஒரு புத்திசாலி மனிதர். இதை வெறும் பேட்டிக்காகவோ அவரை புகழ வேண்டும் என்றோ நான் சொல்லவில்லை. எந்த தலைப்பை பற்றி பேசச்சொன்னாலும் அது குறித்து ஆழ்ந்த புலமையோடு பேசும் திறமைப்படைத்தவர். திமுக அமைச்சர்களிடம் போய் ஜி.எஸ்.டி.பற்றி கேளுங்க, பலருக்கும் எதுவும் தெரியாது. அண்ணாமலை அப்படியல்ல, நிதி, ஜி.எஸ்.டி., விவசாயம், மீனவர் விவகாரம், தேசம் என எந்த சப்ஜெக்டாக இருந்தாலும் 2 மணி நேரம் பேசுவார். இதனால் ஒரு புத்திசாலி தலைவரின் கீழ் வேலைபார்ப்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications