சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்து.. குமரி, புதுக்கோட்டை மாவட்ட பாஜக நிர்வாகிகள் 2 பேர் அதிரடி கைது!
சென்னை: இரு வேறு மாவட்டங்களில் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதற்காக பாஜக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று சனாதன விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்திற்கு பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட செயலாளர் உமேஷ் என்பவர், சனாதான ஒழிப்பு மாநாட்டிற்கு வருகை தர இருந்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக திமுகவினர் புகார் அளித்திருந்தனர். இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்த முயல்வதாகவும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் பதிவிட்டுள்ளதாகவும் உமேஷ் என்பவர் மீது 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதேபோல, கடந்த வாரம் புதுக்கோட்டை வந்து சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட செயலாளர் அரசர்குளம் கமல் கண்ணன் என்பவர் சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக திமுக மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் அண்ணாதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் கமல் கண்ணனை நாகுடி காவல் நிலைய போலீார் இன்று கைது செய்தனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகி போலீஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications