நயினார் தலைமையில் பாஜக உயர்மட்ட கூட்டம்.. டெல்லி விசிட்டிற்கு பின் நடக்கும் ஆலோசனை.. பின்னணி
சென்னை: சென்னையில் இன்று பாஜக உயர் நிலைக் கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன் உள்ளிட்ட பாஜக மேலிட பார்வையாளர்களும், பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டுள்ளனர். டெல்லி சென்றுவிட்டு வந்த இரு தினங்களில் நயினார் நாகேந்திரன் கூட்டும் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூக பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. பிரதான எதிர்கட்சியான அதிமுக விருப்ப மனு பெற்று வருகிறது.

அதிமுக பாஜக கூட்டணி
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இழுத்து வலுவான கூட்டணியை அமைக்க முடிவு செய்துள்ளது. ஆளும் திமுக தனது கூட்டணி பலத்துடன் வலுவாக இருப்பதால், திமுகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
தேசிய ஜனநாய கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரையும் பாஜக கூட்டணிக்குள் மீண்டும் கொண்டு வர பாஜக பேச்சு நடத்தி வருகிறது. ஒருபக்கம் பிரசாரத்தை மேற்கொண்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் கூட்டணி விஷயங்கள், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு பெறுவது போன்றவற்றிலும் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இன்று பாஜக உயர்நிலைக் கூட்டம்
இந்த சூழலில்தான், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் பயணமாக டெல்லிக்கு சென்றார். டெல்லியில் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார் நயினார் நாகேந்திரன். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக நயினார் நகேந்திரன் கூறினாலும், கூட்டணி விவகாரம், எத்தனை தொகுதிகளில் அதிமுகவிடம் கேட்டு பெறுவது என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அதுபோக சுமார் 60 தொகுதிகளுக்கான உத்தேச வேட்பாளர் பட்டியலையும் நயினார் நாகேந்திரன் வழங்கியதாக சொல்லப்பட்டது. எனினும், இதனை நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக மறுத்தார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக பாஜக உயர் நிலை, ஆலோசனை கூட்டம் இன்று கூடியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் இந்தக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
ஆலோசிக்கப்படுவது என்ன?
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்பட பாஜக நிர்வாகிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.. பாஜக மேலிட பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன் ஆகியோரும், தமிழக முன்னாள் பாஜக தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்று உள்ளனர். இந்தக் கூட்டத்தில் தமிழக அரசியல் சூழல், கூட்டணி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்படும் என்று தெரிகிறது.
டெல்லி சென்றுவிட்டு வந்த இரு தினங்களில் நயினார் நாகேந்திரன் கூட்டும் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோர் தமிழகம் வருவது தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications