சும்மா சும்மா கைது பண்ணக் கூடாது.. கண்ணாடிய பாருங்க! நாதக துரைமுருகனுக்கு ஆதரவாக வந்த அண்ணாமலை!
சென்னை: பட்டியல் சமுதாயத்தைத் தவறாகப் பேசினார் என்று நாம் தமிழர் கட்சி பேச்சாளர் சாட்டை துரைமுருகன் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறை, பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த ஒரு அரசு அதிகாரியை, தகாத வார்த்தைகளால் திட்டிய அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத் தேர்தலை ஒட்டி இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், நட்சத்திர பேச்சாளருமான சாட்டை துரைமுருகன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து திருச்சி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளரான அருண், மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதை அடுத்து தென்காசி குற்றாலத்தில் தங்கி இருந்த சாட்டை துரைமுருகனை போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், திருச்சி மாவட்ட நீதிபதி சுவாமிநாதன் முன்னர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க காவல்துறை கேட்டுக் கொண்ட நிலையில், அதனை ஏற்க மறுத்த நீதிபதி சாட்டை துரைமுருகனை விடுவித்தார். சாட்டை துரைமுருகன் மீதான வழக்குப் பதிவுக்கு அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் எதிர்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளை திமுக அரசு கைவிட வேண்டும் என்றும், திரு. சாட்டை துரைமுருகன் மீது தொடர்ந்துள்ள போலி வழக்கைக் கைவிட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"பல ஆண்டுகளுக்கு முன்பு யாரோ எழுதிய பாடலை, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி திரு. சாட்டை துரைமுருகன் அவர்கள் மேடையில் பாடினார் என்பதற்காக அவரைக் கைது செய்திருக்கிறது தமிழகக் காவல்துறை. அதோடு நில்லாமல், அந்தப் பாடலில் இடம் பெற்ற வார்த்தைக்காக, அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதி அவர்கள், அதே வார்த்தையைப் பலமுறை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அப்போதெல்லாம் தவறாகத் தெரியாதது, தற்போது மட்டும் எப்படித் தவறானது என்பதை, வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பாவது, தமிழக காவல்துறை ஆலோசித்திருக்கவேண்டும். தினமும் கொலை, கொள்ளை என, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் தத்தளித்து வரும் தமிழகத்தை, சீரான பாதையில் கொண்டு செல்ல எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், சமூக வலைத்தளங்களிலும், பொதுமேடைகளிலும் திமுகவினரை விமர்சிப்பவர்களை மட்டும் கைது செய்வது சர்வாதிகாரத்தின் உச்சம்.
பட்டியல் சமுதாயத்தைத் தவறாகப் பேசினார் என்று திரு. சாட்டை துரைமுருகன் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறை, பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த ஒரு அரசு அதிகாரியை, தகாத வார்த்தைகளால் திட்டிய அமைச்சர் ராஜகண்ணப்பன் மீதோ, பட்டியல் சமுதாய மக்கள் பிரதிநிதி ஒருவரை, பொது மேடையில் வைத்து சமுதாயத்தை குறிப்பிட்டு பேசிய அமைச்சர் பொன்முடி மீதோ, என்ன நடவடிக்கை எடுத்தது?

போலி சமூக நீதி பேசி ஊரை ஏமாற்றும் திமுக, எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்காக பட்டியல் சமூக மக்களைப் பயன்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உடனடியாக, இது போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளை திமுக அரசு கைவிட வேண்டும் என்றும், திரு. சாட்டை துரைமுருகன் மீது தொடர்ந்துள்ள போலி வழக்கைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
உண்மையாகவே முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு, பட்டியல் சமூக மக்கள் மீது அக்கறை இருந்தால், மூச்சுக்கு முந்நூறு முறை, நான் கருணாநிதியின் மகன் என்று கூறிக்கொள்ளும் அவர், திரு. சாட்டை துரைமுருகன் பேசிய அதே வார்த்தையைப் பயன்படுத்திய அவரது தந்தை மறைந்த கருணாநிதி சார்பாக மன்னிப்பு கேட்பாரா?" என கூறியுள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,"சும்மா அவரை கைது செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. தமிழகத்தில் கூலிப்படைகள், ரவுடிகள் அட்டூழியத்துக்கு எதிராக காவல்துறை தங்களது வீரத்தை காண்பிக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் வழக்கு தொடுத்து சாட்டை துரைமுருகனை குறிவைப்பது நன்றாக இல்லை. அவர் எந்தக் கட்சியை சார்ந்திருந்தாலும் கருத்து சுதந்திரம் உள்ளது. இதனைக் கண்டிக்கிறேன். காவல்துறையினர் திமுகவின் ஏவல்துறையாக இருப்பார்கள் எனத் தெரியவில்லை. மக்கள் இதனை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்" என கூறினார்.












Click it and Unblock the Notifications