H Raja Movie: நடிகர் அவதாரம் எடுத்த எச் ராஜா.. ‛கந்தன் மலை' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு.. கதை என்ன?
சென்னை: பாஜகவின் மூத்த தலைவரான எச் ராஜா அரசியலில் இருந்து சினிமாவில் கால் பதித்துள்ளார். நடிகராக அவதாரம் எடுத்துள்ள எச் ராஜா ‛கந்தன் மலை' என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் குறித்த முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழக பாஜகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் எச் ராஜா. முன்னாள் எம்எல்ஏவான இவர் தற்போது பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் தான் அரசியலில் இருந்து சினிமாவுக்குள் எச் ராஜா நுழைந்து உள்ளதாக சமீபகாலமாக தகவல்கள் வெளியானது.

தமிழகத்தை எடுத்து கொண்டால் நடிகராக இருப்பவர்கள் அரசியல் அவதாரம் எடுப்பது வாடிக்கையாக உள்ளது. எம்ஜிஆர் முதல் நடிகர் விஜய் வரை இதனை நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் அரசியல்வாதிகள் சினிமாவில் நடிப்பது மிகவும் அரிதான விஷயமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் தான் எச் ராஜா புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். எச் ராஜா நடிக்கும் திரைப்படத்துக்கு ‛கந்தன் மலை' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் எச் ராஜா முறுக்கு மீசை வைத்துள்ளார். கழுத்தில் ருத்ராட்ச மாலை, கையில் ருத்ராட்ச மாலை அணிந்துள்ளார். பின்னணியில் கோவிலின் நுழைவு வாயிலில் இருக்கும் கதவு தெரிகிறது. அந்த கதவின் வழியாக எச் ராஜா கூட்டமாக கோவிலுக்கும் நுழையும் வகையில் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
‛கந்தன் மலை' என்பது கடவுள் முருகனின் கோவில் இருக்கும் மலையை குறிக்கும். குறிப்பாக முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக திருப்பரங்குன்றத்தை ‛கந்தன் மலை' என்று சொல்வார்கள். இதனால் இந்த திரைப்படம் திருப்பரங்குன்றம் முருகன் மலையை அடிப்படையாக கொண்டதாக இருக்குமோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே திருப்பரங்குன்றம் கோவில் VS சிக்கந்தர் மலை என்ற பிரச்சனை உள்ளது. இதனால் எச் ராஜா நடிக்கும் இந்த திரைப்படம் கவனம் பெற்றுள்ளது. ‛கந்தன் மலை' திரைப்படத்தை வீர முருகன் என்பவர் இயக்குகிறார். சிவ பிரபாகரன் - சந்திரசேகர் ஆகியோர் படத்தை தயாரித்துள்ளனர். இனி வரும் காலங்களில் திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு எச் ராஜா மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛அரசியலை கடந்து சினிமாவிலும் நீங்கள் வரப்போவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவுகிறது. இசைக்கருவிகளில் இசை வாசிப்பது போன்றவற்றை பார்த்தோம்'' என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு எச் ராஜா சிரித்தபடி, ‛‛அப்படியா.. I Don't Know.. அது வெளியில் வரட்டும்'' என்று கூறியிருந்தார். தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications