‛‛பாவம் அவரே குழம்பிட்டாரு’’.. தமிழகத்தில் மோடிக்கு ‛கை’ சின்னத்தில் ஓட்டு கேட்ட பாஜக நிர்வாகி
திருவள்ளூர்: லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ‛தாமரை' சின்னத்துக்கு பதில் ‛கை' சின்னத்தில் பிரதமர் மோடிக்கு ஓட்டு கேட்ட பாஜக நிர்வாகியால் சிரிப்பலை ஏற்பட்டது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு ஜுன் மாதம் 4ம் தேதி ரிசல்ட் வெளியாக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவ உள்ளது.

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவ உள்ளது. இதில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. தமிழ்நாட்டில் தற்போது பாஜகவுக்கு ஒரு லோக்சபா எம்பி கூட இல்லை.
கடந்த 2014 லோக்சபா தேர்தலில் கன்னியாகுமரியில் வெற்றி பெற்று எம்பியாக மத்திய இணையமைச்சராக பொன் ராதாகிருஷ்ணன் செயல்பட்டார். இவர் உள்பட கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட அனைவரும் தோல்வியடைந்தனர். இதனால் லோக்சபா எம்பிக்கள் இல்லை.
இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களை கைப்பற்றும் முனைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல் முருகன் உள்பட அனைத்து நிர்வாகிகளும் செயல்பட்டு வருகின்றனர். பிரதமர் மோடியும் அடிக்கடி தமிழ்நாடு வந்து செல்கிறார். 2 நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி மீண்டும் நாளை கோவை வருகிறார். அதன்பிறகு நாளை மறுநாள் சேலம் செல்கிறார்.
இந்நிலையில் தான் பாஜக சார்பில் போதை ஒழிப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டம் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் நடந்தது. இதில் பாஜக நிர்வாகியான வேலூர் இப்ராஹிம் உள்பட பல நிர்வாகிகள் பங்கேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவை சேர்ந்த அத்திப்பட்டு துரைக்கண்ணு பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடிக்கு ‛கை' சின்னத்தில் ஓட்டு கேட்டதால் நிர்வாகிகள் சிரித்ததோடு உடனடியாக தவறை சுட்டிக்காட்டி திருத்தம் செய்தனர்.
அதாவது துரைக்கண்ணு மேடையில் பேசியபோது, ‛‛தமிழ்நாட்டில் பிரதமர் மோடி 11 மருத்துவ கல்லூரிகளை வழங்கி உள்ளார். இப்படி இருக்கையில் பாஜக என்ன செய்துள்ளது என எப்படி கேள்வி கேட்க முடியும். இப்படிப்பட்ட பெரிய திட்டங்களை செய்துள்ள மோடி அரசுக்கு பொன்னான வாக்குகளை உங்களின் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்'' என்றார்.
இதை கேட்டவுடன் சுற்றியிருந்தவர்கள் சிரிக்க, உடனடியாக சுதாரித்து கொண்ட நிர்வாகி துரைக்கண்ணுவிடம், ‛‛தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்'' என திருத்தம் செய்தார். அதன்பிறகு தவறை உணர்ந்த துரைக்கண்ணு, ‛‛தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். மறந்தும் கை சின்னத்தில் வாக்களித்து விடாதீர்கள். வார்த்தைக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நமது சின்னம் தாமரை சின்னம். மோடியின் சின்னம் தாமரை சின்னம். பிஜேபியின் சின்னம் தாமரை. தாமரை மலரும்.. தாமரை மலரும்..'' என்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இப்படி பிரதமர் மோடி மற்றும் பாஜகவுக்கு ‛கை' சின்னத்தில் வாக்கு கேட்ட துரைக்கண்ணு காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வந்தார். சமீபத்தில் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதனால் தான் அவர் தவறுதலாக தாமரை என்பதற்கு பதில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications