ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கும் சேர்த்து 60 தொகுதிகளை கேட்கிறதா பாஜக? இதெல்லாம் நடக்கிற சமாச்சாரமா?
சென்னை: தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ள நிலையில் அதிமுகவிடம் இருந்து பாஜக 60 தொகுதிகளை கேட்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோருக்கும் சேர்த்து பாஜக கூட்டணிக்கென 60 தொகுதிகளை தாருங்கள் என பியூஷ் கோயல் கேட்கலாம் என்கிறார்கள்.

தொகுதி பங்கீடு தொடர்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக இருந்த பியூஷ் கோயல், இந்த முறையும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக சென்னை வந்துள்ளார்.
அவர் சென்னை திநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு சென்ற பியூஷ் கோயல், அங்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியிருந்தார்.
அதற்கு முன்னதாக நயினார் நாகேந்திரனும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜும் ஆலோசனை நடத்தியிருந்தனர். அது போல் இன்னொரு பக்கம் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் பசுமை வழிச்சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியும் ஆலோசனை நடத்தியிருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் சென்னை பட்டினம்பாக்கம் அருகே உள்ள எம்ஆர்சி நகரில் லீலா பேலஸில் அதிமுக- பாஜக ஆலோசனை நடத்துகிறது. இதற்காக பியூஷ் கோயல், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர்.
அங்கு அவர்களை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணியும் தங்கமணியும் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியும் பியூஷ் கோயலும் தொகுதி பங்கீடு குறித்து பேசுவார்கள் என தெரிகிறது.
அதிமுக தற்போது பிரிந்து கிடக்கிறது. மேலும் டிடிவி தினகரன், ஓபிஎஸ் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால் வரும் 2026 ஆம் ஆண்டு என்ன தான் சிறிய சிறிய கட்சிகளை எல்லாம் கூட்டணியில் சேர்த்தாலும் ஒருங்கிணைந்த அதிமுக இல்லாமல் ஒன்றும் நடக்காது என்பது டெல்லி பாஜக தலைமையின் கணக்காக இருக்கிறது.
இதனால் டிடிவி தினகரனையும் ஓபிஎஸ்ஸையும் கூட்டணிக்குள் நுழைக்கும் முயற்சிகளில் அண்ணாமலை முயற்சியில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தை பொருத்தமட்டில் பாஜகவுடன் அதிமுக மட்டுமல்லாமல் தமாகா, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
இவற்றுடன் டிடிவி தினகரன், ஓபிஎஸ் சேர்ந்தால் மொத்தம் 80 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்க பியூஷ் திட்டமிட்டிருக்கிறாராம். அதாவது இந்த 60 தொகுதிகளில் 40 தொகுதிகளில் பாஜகவும், மீதமுள்ள 20 தொகுதிகளை என்டிஏ கூட்டணி கட்சிகளுக்கும் கொடுக்கலாம் என இருக்கிறாராம்.
ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொள்ள மாட்டார் என்றே தெரிகிறது. தமிழகத்தை பொருத்தமட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணி என்பதால் அவர்களாகவே பாஜகவுக்கு இத்தனை, கூட்டணி கட்சிகளுக்கு இத்தனை என பிரித்து கொடுத்துவிடுவார்கள்.
மேலும் பாஜக கூட்டணியில் தினகரன் வர வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஓபிஎஸ் வரமாட்டார் என்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என்பதை ஓபிஎஸ் ஏற்க மாட்டார் என்றே சொல்லப்படுகிறது.
ஒன்று அதிக சீட்டுகள் வேண்டுமென்றால் நாங்கள் ஒதுக்கும் தொகுதிகளில்தான் போட்டி என்றும் நீங்கள் கேட்கும் தொகுதிகள் என்றால் குறைவான தொகுதிகளில் போட்டியிடுங்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி கட் அன்ட் ரைட்டாக சொல்லிவிடுவார் என்றே அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள். இது முதற்கட்ட பேச்சுவார்த்தைதான், இன்னும் 2 அல்லது 3 பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இறுதி முடிவு செய்யப்படும் என சொல்லப்படுகிறது. அதுவரை பொறுத்திருப்போம்!












Click it and Unblock the Notifications