டக்கென முடிவை மாற்றிய அண்ணாமலை.. பாஜக கூட்டம் திடீர் ரத்து! தேர்தலுக்குப் பிறகு கட்சிக்குள் குழப்பம்
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நாளை நடைபெற இருந்த பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவியது. தொடர்ந்து, அடுத்தடுத்த கட்ட தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. ஜூன் 1ஆம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.

இதற்கிடையே, பாஜக பூத் ஏஜென்டுகளுக்கு பணம் கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மதுரையின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினரே போஸ்டர் ஒட்டினர். பாஜக பூத் ஏஜென்டுகளுக்கு கொடுக்கப்பட்ட நிதியை பாஜக நிர்வாகிகளே மோசடி செய்ததாக குற்றம்சாட்டி போஸ்டர் ஒட்டப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதேபோல, மத்திய சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வினோஜ்.பி.செல்வத்தை ஆதரித்து பாஜகவினர் தேர்தல் பிரச்சாரம் செய்ய ஏதுவாக தேர்தல் பணிமனை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் முடிவடைந்துவிட்ட பிறகும், பாஜகவினர் அடிக்கடி இந்த பணிமனைக்கு வந்து சென்று கொண்டிருந்தனர்.
அண்மையில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்தி மற்றும் அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமார் ஆகியோர் இந்த பணிமனைக்கு தங்களது ஆதரவாளர்களுடன் வந்திருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இருவரும் ஒருவர் மீது ஒருவர், அமைந்தகரை காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதாக கூறி புகார் மனு அளித்தனர்.
இருவரும் அளித்த புகாரின் பேரில், தனித்தனியாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக நிர்வாகிகள் இருவர், தேர்தல் அலுவலகத்திலேயே ஒருவர் ஒருவர் தாக்கி கொண்டு, அந்த சம்பவம் வழக்குப் பதிவு செய்யும் அளவிற்கு பூதாகரமாகி இருப்பது அந்த கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபோல, தேர்தல் பணியாற்றிய பாஜகவினருக்கு பணம் விநியோகம் செய்ததில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக, பாஜக தமிழக தலைமைக்கு பல்வேறு புகார்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, திங்கட்கிழமை, சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அண்ணாமலை தலைமையில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அண்ணாமலை தலைமையில் நாளை நடைபெற இருந்த பாஜக ஆலோசனை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், தேதி பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆலோசனை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது ஏன் என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications