நட்டாற்றில் தத்தளித்த அதிமுக.. காப்பாத்துனது யாருங்க? சீண்டிய மாஜிக்கு நாராயணன் பதிலடி.. போச்சே!
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்த கருத்து பாஜகவினரை சூடாக்கிய நிலையில், அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.
2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி பாஜகவோடு அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக ஆட்சி அதிகாரத்தை இழந்தது.

அதிமுக - பாஜக : இந்நிலையில் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிட இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இந்த கூட்டணிக்குள் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. பாஜகவினர் அதிமுகவினரையும், அதிமுகவினர் பாஜகவினரையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
அண்ணாமலையோ அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் மாநில தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவேன் என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை முதிர்ச்சியற்று செயல்படுகிறார். எனவே அவரைப்பற்றி எதையும் என்னிடம் கேட்காதீர்கள் என காட்டமாக கூறினார். இதனையடுத்து இரு தரப்பையும் டெல்லிக்கு அழைத்து அமித் ஷா சமரசம் பேசினார்.
மீண்டும் உக்கிரம் : இதனால், பாஜக அதிமுக இடையே வார்த்தைப்போர் சற்று ஓய்ந்திருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் உக்கிரமாகத் தொடங்கியுள்ளது. அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "இந்தியாவிலேயே மாபெரும் இயக்கம் எடப்பாடியார் தலைமையில் உள்ள அதிமுகதான். இயக்கத்தை நம்பி வருபவர்களை நாங்கள் கரை சேர்ப்போம்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுவது போல் தேர்தலில் அவர்கள் தயவில் நாங்கள் வெற்றி பெறப் போவதில்லை. எல்லாரும் நீச்சல் அடிக்கலாம்... ஆனால் கரை சேர்ந்தது அதிமுகவினர் தான். எங்களுடன் பயணித்தால் மட்டுமே அவர்களால் கரைசேர முடியும். இல்லாவிட்டால் நட்டாற்றில் போக வேண்டிய பரிதாபம் அவர்களுக்கு ஏற்படும்" என தெரிவித்திருந்தார். இந்நிலையில், செல்லூர் ராஜூ பேச்சுக்கு பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.
நங்கூரம் : இதுதொடர்பாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கரை சேர முடியாமல், பரிதாபமாக நட்டாற்றில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை நங்கூரமிட்டு பாதுகாத்த வரலாற்றை மறந்து விட்டு தானாகவே கரை சேர்ந்ததாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள், 'இனி நங்கூரம் தேவையில்லை' என்ற அலட்சியப்படுத்தும் போக்கு தான் பரிதாபத்திற்குரியது" எனத் தெரிவித்துள்ளார்.
நாளை வேலூரில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழ்நாட்டுக்கு வர உள்ளார். இன்று சென்னை வரும் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் கசிந்து வரும் நிலையில் அதிமுக - பாஜக இடையேயான இந்த கருத்து மோதல் சர்ச்சையை கிளப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications