நீங்க தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்தானே.. திமுக எம்எல்ஏவா இருக்கீங்களே.. வேல்முருகனுக்கு பாஜக கேள்வி
சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் என சொல்லிக் கொண்டு திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பது முரணாக இல்லையா என வேல்முருகனை தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி வேல்முருகன் கூறியிருந்ததை சுட்டி காட்டி நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து வேல்முருகன் கூறியிருப்பதாவது : தமிழ்நாட்டில் 50 இடங்களில் மதத்தின் பெயரால் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலங்கள் நடந்தது இல்லை.
தமிழகம் இந்தியாவிலே அமைதியான மாநிலம் அமைதியான மக்கள் வாழ்கின்ற ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொண்டு இஸ்லாமிய கிறிஸ்தவர்களோடு அன்புகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

பண்பாடு
பண்பாட்டில் சிறந்து விளங்கும் தமிழகம் மதத்தின் பெயராலோ, சாதியின் பெயராலோ சண்டையிடக் கூடாது என சமூக நீதி ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ்க்கு அனுமதி அளித்தது ஏற்புடையதல்ல அதே நேரத்தில் தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த தடை விதித்தது வரவேற்பு கூறியது பாராட்டத்தக்கது.

தமிழக அரசு வழக்கறிஞர்கள்
அதே நேரத்தில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் ஆர். எஸ். எஸ். ஊர்வலத்தை அக்டோபர் இரண்டாம் தேதி தவிர்த்து ஏனைய தேதிகளில் நடத்திக் கொள்ளலாம் என்பது நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர்கள் கூறுவது முன்னுக்கு பின் முரணாக உள்ளது என பண்ருட்டி வேல்முருகன் தெரிவித்திருந்தார்.

ஆர்எஸ்எஸ் ஊர்வலம்
இந்த ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை நடத்தினால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என பல கட்சியின் தலைவர்கள் அந்த அமைப்புக்கே தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் வேறு ஒரு தேதியில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை நடத்திக் கொள்ளலாம் என கூறியிருப்பதற்கு வேல்முருகன் தனது எதிர் கருத்தை பதிவு செய்திருந்தார்.

எது முரண்?
இதற்கு பதிலளித்து பாஜகவின் நாராயணன் திருப்பதி கூறியிருப்பதாவது: தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் என்று சொல்லிக்கொண்டு, தி மு கவின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பது முரண் இல்லையா? வெட்கக்கேடு இல்லையா? அவமானம் இல்லையா? சொந்த தொகுதியில் கூட தி மு க வின் சின்னத்தை அண்டி பிழைத்து, சட்டமன்ற உறுப்பினராக நீடிப்பவர் முரண் பற்றி பேசுவதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications