அதிமுக மோதல்.. "அந்த" ஒரு கேள்வியை கேட்டதும்.. சட்டென நடந்து போன நட்டா.. பாஜக முடிவோடதான் இருக்கோ?
பாஜக தலைவர்கள் இதில் எந்த விதமான முடிவையும் எடுக்க கூடாது, எதையும் பேச கூடாது என்று டெல்லி தரப்பு அட்வைஸ் செய்ய உள்ளதாம்.
சென்னை: பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா நேற்று தமிழ்நாடு வருகை புரிந்தார். கிருஷ்ணகிரி புதிய மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தை நட்டா திறந்து வைத்தார். பாஜகவினர் வரிசையாக அதிமுகவில் இணையும் நிலையில் நட்டா தமிழ்நாடு வந்தது கவனம் பெற்றது.
கடந்த சில நாட்களாக பாஜகவினர் வரிசையாக தமிழ்நாட்டில் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.
பாஜகவின் ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல் குமார் திடீரென பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். அதோடு எடப்பாடி பழனிசாமியை.. எடப்பாடியார் என்று வாழ்த்தி.. அண்ணாமலையை கடுமையாக தாக்கி உள்ளார்.

வாழ்த்து
மேலும் தனக்கு நெருக்கமான பல நிர்வாகிகளை அதிமுக நோக்கி நிர்மல் இழுத்து வருகிறார். அண்ணாமலையை விமர்சனம் செய்த திலீப் கண்ணனும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து உள்ளார். OBC அணியின் மாநில செயலாளர் ஜோதி, முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், , திருச்சி புறநகர் மாவட்ட துணைத்தலைவர் விஜய் ஆகியோர் அதிமுக அலுவலகத்தில் குவிந்து எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இன்று இணைந்தனர். இந்த நிகழ்வில் எடப்பாடி மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார். பொதுவாக கூட்டணி கட்சியில் இருந்து மாற்று கட்சிகள் ஆளை எடுத்தாலும் கூட தனக்கு அதன் தலைவர்களை தாக்கி விட்டு வருபவர்களை இப்படி சிரித்தபடி அழைக்க மாட்டார்கள். கூட்டணி கட்சி தலைவராக இருந்தாலும்.. அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்தவர்களை கூட எடப்பாடி கட்சியில் சேர்த்துக்கொள்கிறார்.

என்ன நடக்கிறது
இதுபோக லதா - பாஜக மாநில செயலாளர்,உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு வைதேகி - பாஜக ஒன்றிய தலைவர் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு, தாம்பரம் ஆகியோர் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்துள்ளனர். இதனால்தான் அதிமுக பாஜக இடையே வெளிப்படையான மோதல் ஏற்பட்டு உள்ளது. அதிமுகவை சரமாரியாக அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். இந்த விவகாரத்தில் முதலில் காட்டமாக கருத்து சொன்ன அமர் பிரசாத் ரெட்டி, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகளை காலில் போட்டு மிதித்து, முழுமையாக மக்களை விலை கொடுத்து வாங்கிய இரு பெரும் திராவிட இயக்கங்கள், ஜனநாயகம் குறித்து வாய் கிழிய பேசலாமா? என்றுள்ளார்.

அண்ணாமலை விமர்சனம்
அதிமுகவை எதிர்த்து பேசிய அண்ணாமலை, பாஜகவினரை இழுத்தால்தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை வந்துவிட்டது. அந்த அளவிற்கு திராவிட கட்சிகளின் நிலை உள்ளது. திராவிட கட்சிகளை நம்பித்தான் பாஜக இருந்தது என்று கூறி வந்தனர். திராவிட கட்சிகளில் இருந்து ஆட்களை அழைத்து நாங்கள் கட்சி நடத்தியதாக கூறி வந்தனர். ஆனால் இப்போது பாருங்கள். பாஜகவை நம்பி திராவிட கட்சிகள் உள்ளன. திராவிட கட்சிகள் இப்போது யாரை நம்பி இருக்கிறார்கள். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும், கட்சியில் இருந்து போனால் தான் புதியவர்களுக்கு பொறுப்பு தர முடியும். அப்படித்தான் புதிய தலைவர்களுக்கு பதவி அளிக்க முடியும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்னொரு பக்கம் எடப்பாடியின் உருவப்படத்தை பாஜகவினர் எரித்த சம்பவங்களும் நடந்தது

நட்டா
இந்த விமர்சனங்களுக்கு இடையில்தான் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா நேற்று தமிழ்நாடு வருகை புரிந்தார். கிருஷ்ணகிரி புதிய மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தை நட்டா திறந்து வைத்தார். பாஜகவினர் வரிசையாக அதிமுகவில் இணையும் நிலையில் நட்டா தமிழ்நாடு வந்தது கவனம் பெற்றது. கிருஷ்ணகிரியில் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்து அவர் பேசுகையில், இப்போதே மாநில கட்சிகளின் ஆதிக்கங்கள் குறைந்து வருகின்றன. மாநில கட்சிகள் எல்லாம் தற்போது குடும்ப கட்சிகளாக விட்டன. பாஜகவில் வாரிசு அரசியல் கிடையாது. ஒடிசா, தெலங்கானா, மராட்டியம் , பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம், பீகார்,மேற்கு வங்கம், காஷ்மீரில் வாரிசு அரசியல் இருந்தது. இங்கே எல்லாம் மோசமான ஆட்சிதான் இருந்தது.

பாஜக
இது போன்ற குடும்ப ஆட்சிக்கு பாஜகதான் முற்றுப்புள்ளி வைத்து வருகிறது. தமிழ்நாட்டிலும் வாரிசு அரசியல் உள்ளது. கருணாநிதி மகன் முதல்வர் ஆகிவிட்டார். அவரின் மகன் அமைச்சர் ஆகிவிட்டார். அடுத்து என்ன நடக்கும் என்று தெரியவில்லை. மக்கள் மீது திமுக எந்த அக்கறையும் கொள்ளவில்லை. மக்களை பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. பாஜகவால் மட்டுமே தமிழ்நாட்டில் நல்ல ஆட்சியை கொடுக்க முடியும். கண்டிப்பாக தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என்று கூறினார். இதையடுத்து தையடுத்து நட்டா தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நேற்று தனியாக நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் நட்டா கடுமையாக சில விஷயங்களை பேசி உள்ளார். அதில் பாஜக - அதிமுக மோதல் குறித்து பேசி உள்ளனர்.

கூட்டணி
இரண்டு கட்சிகளும் கூட்டணி வைக்கலாமா வேண்டாமா என்பது குறித்து இவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. அதோடு ஓ பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு குறித்தும், அவரை ஆதரிக்கலாமா என்பது குறித்தும் இவர்கள் பேசி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் நட்டா ஒரு முடிவை எடுப்பார். அதுவரை பாஜக தலைவர்கள் இதில் எந்த விதமான முடிவையும் எடுக்க கூடாது, எதையும் பேச கூடாது என்று டெல்லி தரப்பு அட்வைஸ் செய்து உள்ளதாம். இந்த நிலையில் நேற்று கூட்டம் முடித்து கிளம்பிய நட்டாவிடம் செய்தியாளர் ஒருவர் பாஜக - அதிமுக கூட்டணி குறித்து கேட்டார். அதற்கு முந்தைய கேள்விகளுக்கு பயத்தில் அளித்த நட்டா இந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் அங்கிருந்து சட்டென வெளியேறினார். இதனால் பாஜக இந்த கூட்டணி விவகாரத்தில் என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications