அமித்ஷா கைக்கு சென்ற ரிப்போர்ட்.. டெல்லி பறந்த நயினார் நாகேந்திரன்.. பாஜகவின் அடுத்த திட்டம் என்ன?
சென்னை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீரென டெல்லிக்கு பயணம் செய்திருக்கிறார். தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், கூட்டணி விவகாரங்கள் மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசிக்க நயினார் நாகேந்திரன் அழைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவடைந்து என்டிஏ கூட்டணி ஆட்சி அமைத்துவிட்ட நிலையில், பாஜகவின் பார்வை தமிழ்நாடு பக்கம் திரும்பி இருக்கிறது. ஏற்கனவே பிரதமர் மோடி ஒருமுறை கோவை வந்து சென்ற நிலையில், அடுத்த மாதம் அமித்ஷா வர இருக்கிறார். அமித்ஷா வரும் போது அதிமுக தலைமையிலான கூட்டணியை இறுதி செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீரென இன்று காலை டெல்லி சென்றுள்ளார். அவருடன் தமிழக பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா உள்ளிட்டோரும் அமித்ஷாவை சந்தித்திருக்கின்றனர். பைஜெயந்த் பாண்டா ஏற்கனவே பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்துவிட்டார். தமாகா ஏற்கனவே என்டிஏ கூட்டணியில் தான் இருக்கிறது.
தற்போது நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றதற்கு பின்னணியில் அமித்ஷா கைகளுக்கு சென்ற ரிப்போர்ட் தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. நயினார் நாகேந்திரன் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணம் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று டெல்லி தலைமைக்கு தெரிய வந்துள்ளது. இதனால் நயினார் நாகேந்திரனை அழைத்து அமித்ஷா விளக்கம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை இணைப்பதில் உள்ள சிக்கல்கள், பாஜகவுக்கான தொகுதி பங்கீடு, பூத் கமிட்டி வலுவாக உள்ள தொகுதிகள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனிடையே செங்கோட்டையன் தவெகவில் இணைய எடுத்துள்ள முடிவையும் டெல்லி பாஜக கண்காணித்திருக்கிறது.
இதனால் தமிழக அரசியலின் போக்கை கணித்து அடுத்த மாத இறுதிக்குள் கூட்டணியை உறுதி செய்து, சட்டசபைத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள பாஜக முடிவு எடுத்திருக்கிறது. அதேபோல் பாஜகவின் வேட்பாளர்கள் பட்டியலையும் டெல்லி தலைமை முடிவு செய்ய தயாராகி வருவதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications