ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பரபரப்பான சூழ்நிலையில் பாஜக சரத்குமார் தன் ஆதரவாளர்களுடன் நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். பாஜகவில் இணைந்து அவருக்கு எந்தப் பதவியும் வழங்கப்படாத நிலையில் அதிருப்தியில் ஆலோசனை செய்வதால் பரபரப்பு நிலவுகிறது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சியும் களத்தில் சுழன்று கொண்டிருக்கிறார்கள். திமுக பிரம்மாண்ட கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கிறது. (BJP Sarathkumar)

சரத்குமார் பாஜக (BJP Sarathkumar)
மறுபக்கம் அதிமுக கூட்டணியில் எதிர்பார்த்த கட்சிகள் இணையவில்லை. தேமுதிக, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரும் கூட்டணியை விட்டு விலகிவிட்டனர். அதிமுக - அமமுக - பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடும் இறுதியடையவில்லை. தவெக விஜய்யை தங்கள் பக்கம் இழுப்பதற்கு எடுத்த முயற்சியும் நிறைவேறவில்லை. தற்போது மற்றொரு புதிய பிரச்சனை எழுந்துள்ளது.
நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி என்கிற பெயரில் கட்சி நடத்தி வந்தார். அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைத்து வந்தார். கடந்த 2024 மார்ச் மாதம் திடீரென மகவை பாஜகவுடன் இணைத்தார். நள்ளிரவில் தோன்றிய திடீர் எண்ணத்தால் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்ததாக சரத்குமார் கூறியிருந்தார்.
ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் ராதிகா விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார். இருந்தாலும் சரத்குமாருக்கு முக்கிய பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. சரத்குமார் பாஜகவில் இணைந்து கிட்டத்தட்ட 2 வருடங்களாகிவிட்ட நிலையில் எதிர்பார்த்தது போல எந்த பதவியும் கிடைக்கவில்லை. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், "நான் இந்த தேர்தலில் போட்டியிட மாட்டேன். என்னுடைய ஆதரவாளர்களுக்கு வாய்ப்பளித்து அழகு பார்க்க விரும்புகிறேன்" என சரத்குமார் கூறியிருந்தார்.
ஆனால் சரத்குமாருக்கோ, அவருடைய ஆதரவாளர்களுக்கோ எந்த முக்கியத்துவமும் வழங்காததால் சரத்குமார் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. தனது ஆதரவாளர்களுடன் தியாகராய நகர் பகுதியில் சரத்குமார் தன்னுடைய ஆதரவாளர்களுடன் நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். பாஜக தன்னை புறக்கணிப்பதாக அவர் தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய முடிவு
இதில் சமகவில் இருந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். தொடர்ந்து பாஜகவில் பயணிக்கலாமா அல்லது நமக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சியில் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளலாமா என்பது குறித்து சரத்குமார் ஆலோசித்து முடிவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications