தமிழ்நாட்டிற்கு துரோகம்.. "பீகார்" வதந்தி பரப்பியதே பாஜகதான்.. அண்ணாமலைக்கு செக்.. விளாசிய டிஆர்பி
சென்னை: வட இந்தியர்கள் தொடர்பாக பொய்யான செய்தி பரவிய நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலையை எம்எல்ஏ டிஆர்பி ராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் பீகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் குறித்து வன்முறையை உருவாக்கும் விதமாக பொய்யான தகவல்களுடன் அறிக்கை வெளியிட்டதாக கூறி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சோஷியல் மீடியாக்களில் இரண்டு வீடியோக்கள் வேகமாக பரவின. பீகாரில் இந்த வீடியோ பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த வீடியோக்கள் பொய்யானது ஆகும். இந்த விவகாரத்தில் பொய்யான செய்திகளை பரப்பிய பீகார் பாஜக நிர்வாகிகள் பிரசாந்த் உமாரா, தன்வீர் ஆகியோரை போலீசார் பிடிக்க டெல்லி விரைந்துள்ளனர்.

வதந்தி
இதில் வதந்தியை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்ட செய்தி நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதோடு பொய்யாக அறிக்கை வெளியிட்டதாக அண்ணாமலை மீதும் வழக்கு பதியப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலையை எம்எல்ஏ டிஆர்பி ராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், வதந்திகளை பரப்பி தமிழ்நாட்டுக்கு பாஜக செய்துள்ள துரோகச் செயல் மக்களுக்கும்,குறிப்பாக வணிக பெருமக்களுக்கும் தெளிவாகிவிட்டதால் அலறல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் பொய்புரட்டு சங்கத் தலைவர் அண்ணாமலை!

வடமாநிலத்தவர்
உண்மையிலேயே தமிழ்நாட்டின் மீது அக்கறை இருந்தால் அவர் செய்திருக்க வேண்டியது என்ன? வடமாநிலத்தவர் மீதான பிரச்சாரங்களுக்கு முடிவு கட்டுவாரா முதல்வர் என்று கேட்கும் அண்ணாமலை, இக்கேள்வியைக் கேட்க வேண்டியது இந்தியாவின் பிரதமரிடம்தான். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாள் கூட்டத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பங்கேற்றதால் கிலி அடைந்தது பாஜக! அதன் உத்தரபிரதேச மாநில செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உமாராவ் என்பவர்தான் தமிழ்நாட்டில் பீகார் மாநிலத் தொழிலாளர்கள் 12 பேர் கொல்லப்பட்டதாக அரசியல் உள்நோக்கத்துடன் சமூக வலைத்தளத்தில் வதந்தி நெருப்பைப் பற்றவைத்தார் என வலைதள செய்திகள் மூலம் தமிழ்நாடு காவல் துறை கவனத்தில் கொண்டுள்ளது

அறிக்கை கேள்வி
எப்போதும் வகுப்புவாதம், மதவெறி, மொழிவெறி, கலவரம், பிணவாடை இவற்றிலேயே அரசியல் செய்யும் பா.ஜ.க.வினர் இந்த வதந்தியைக் காட்டுத் தீயைப் போல பரப்பி, தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்கச் செய்யலாம் என நினைத்தனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உறுதியான நிலைப்பாட்டால் அமைதிப்பூங்காவாகத் தமிழ்நாடு திகழ்வதுடன், வதந்தி பரப்பிய பா.ஜ.க செய்தி தொடர்பாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கைக்கான முன்னெடுப்புகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

வாரணாசி
இத்தகைய வதந்தி வன்முறையாளர்களின் அவதூறு அபாயங்களுக்கு உத்தரபிரதேசத்து வாரணாசி தொகுதி எம்.பி.யும் நாட்டின் பிரதமருமான நரேந்திர மோடி அவர்கள் முடிவு கட்ட வேண்டும் என்று அண்ணாமலை விரைவில் அறிக்கை விடுவாரா ???, என்று டிஆர்பி ராஜா கேள்வி எழுப்பி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவிய இரண்டு வீடியோவில் ஒன்று, பீகார்-ஜார்க்கண்ட் தொழிலாளர்கள் மோதல் சம்பவம். அது இங்கே நடக்கவே இல்லை. மற்றொன்று தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்குள் நடத்திக்கொண்ட சண்டை. இதைத்தான் பொய்யாக தமிழ்நாடு சம்பவம் என்று இவர்கள் பரப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications