மோசமான கட்சி விசிக.. படக்னு திருமாவுக்கு எச். ராஜா சப்போர்ட்.. போற போக்கில் வைகோவுக்கும் ஒரு கேள்வி
சென்னை: இந்தியாவிலேயே மிக மோசமான சாதி கட்சி விசிக தான் என்று தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். அதேசமயம், ஆட்சியில் திருமாவளவன் பங்கு கேட்பது ஒன்றும் தவறில்லை என்றும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், நலத்திட்ட உதவிகளை வழங்கிய எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திமுக நிர்வாகிகள்: "தமிழ்ச் சமுதாயம் மிக மிக சீரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. காரணம் இந்த திராவிட கட்சிகள்தான். 2000 கோடி 3000 கோடி ரூபாய்க்கு போதை பொருட்களை கடத்துபவர்களாக திமுக நிர்வாகிகளாக இருக்கிறார்கள்..
உதாரணத்துக்கு 70 கோடிக்கு போதைப் பொருள் கடத்துபவர் ராமநாதபுரத்தில் திமுக நிர்வாகி, அதே போல புதுக்கோட்டை சுந்தர பாண்டியன்... இப்படியெல்லாம் இருக்கிறார்கள்.. அதனால், திராவிட முன்னேற்ற கழகம் போதை கடத்துவோர் அணி என்ற ஒரு அணியை வைத்துக் கொள்ளும் அளவிற்கு மோசமாக நிலைமை இருக்கிறது.
மன்னிப்பு: ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பில்லு கேட்டால் அடிக்கிற ஒரு கட்சி, யாரோ ஒருவர் மன்னிப்பு கேட்டுவிட்டார் என்பதற்காக என்ன பாடுபடுத்துகிறார்கள் என்று பாருங்கள். இதிலிருந்தே தெரியவில்லையா திமுக ஆட்சி செய்ய தகுதி இல்லாத ஒரு கட்சி என்று? வரும் சட்டமன்ற தேர்தலில் 200, 300 இல்லை... 20 அல்லது 30-ஆவது ஜெயிக்கிறார்களா என்று பார்ப்போம்.
இந்துத்துவா கும்பல் திராவிட கட்சிகளை ஒழிக்க நினைக்கிறது என்று வைகோ சொல்கிறார். முதலில் மதிமுகவை ஒழித்தது யார் என்று அவர் சொல்லட்டும்... இன்று மதிமுக என்ற கட்சியே காணாமல் போயிருக்கிறது. அதனால், திராவிட கட்சிகளை நீங்களே அழித்துக் கொள்ளும்போது, எங்களுக்கு ஏன் வேலை இருக்க போகிறது?
முத்ரா கடன் : தமிழகத்தில் 5.6 கோடி முத்ரா கடன் வாங்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் கூறியிருப்பது, ஒருவரே பலமுறை கடன் பெற்றிருக்கிறார்கள் என்ற அடிப்படையில்தான். இதற்கும் மக்கள் தொகைக்கும் சம்பந்தம் இல்லை.
முத்ரா கடன் வாங்கியவர்கள் அளவுக்கு கூட, பாஜகவால் தேர்தலில் வாக்குகளை பெற முடியவில்லை என்று கேட்கிறீர்கள். வாக்குகளையும் முத்ரா கடன் திட்ட பயனாளர்களையும் ஒப்பிட வேண்டாம். முன்பைவிட, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 80 லட்சம் ஓட்டுகள் கிடைத்திருக்கின்றன. பாஜக வளர்ந்துள்ளது.
இந்தியாவிலேயே மிக மோசமான சாதிக்கட்சி என்றால் அது விசிக தான். திருமாவளவன் பட்டியல் சமுதாய மக்களுக்கான தலைவர் கிடையாது... தேவேந்திர குல வேளாளர் மக்கள் விசிகவின் எந்த கொள்கையும் ஏற்கவில்லை.
கருணாநிதி: கருணாநிதி ஆட்சியில் அருந்ததியர் சமுதாயத்துக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கினார். அதனை திருமாவளவன் தான் கடுமையாக எதிர்த்தார்... பட்டியல் சமுதாயத்திலேயே குறிப்பிட்ட ஒரு சமுதாயத்துக்கு மட்டும் தலைவராக இருந்து கொண்டு, குறுகிய சாதியவாதம் பேசும் திருமாவளவன், மற்ற கட்சிகளையோ, பாஜகவை பற்றி பேசலாமா?
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற திருமாவளவனின் கோரிக்கை நியாயமானதுதான்.. ஏனென்று சொன்னால் கூட்டணி அரசு வெற்றி பெறாது என்பதே ஒரு மாயை. கூட்டணி ஆட்சியில் ஐந்தாண்டு காலம் வெற்றிகரமாக ஆட்சி நடத்தியவர் வாஜ்பாய், அப்போது எங்களுக்கு 180 இடங்கள் மட்டுமே இருந்தன. அதன் பிறகு அதேபோல 2014, 2019 ஆகிய இரண்டு தேர்தலிலும் பெரும்பான்மை இருந்தும் கூட்டணி கட்சிகளை அமைச்சரவையில் அங்கமாக வைத்துக் கொண்டது பாஜக.
அமைச்சரவை: தேர்தலில்போது ஒருவர் பெயரை கூறி, அவர் படத்தை போட்டு ஓட்டு கேட்பீர்கள். ஆனால், அவரை மந்திரி சபையில் உள்ளே நுழைய விட மாட்டீர்களா? ஆகவே, திருமாவளவன் முன்வைப்பது ஒரு நியாயமான கோரிக்கை. அவரது நிலைப்பாட்டை பாரதிய ஜனதா கட்சி 100 சதவீதம் ஆதரிக்கிறது.
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காமல், ஓணம் பண்டிகைக்கு விஜய் வாழ்த்து சொல்லியிருப்பது மிகவும் தவறு. பெரும்பான்மை சமுதாயத்தை விஜய் காயப்படுத்தி இருக்கிறார்... மும்மொழி கொள்கையை எதிர்ப்பவர்களின் குழந்தைகள் சிபிஎஸ்இ பள்ளிக்கூடங்களில் படிக்க கூடாது. இருமொழி பள்ளிகளில் மட்டுமே படிக்க வேண்டும்" என்றார் மூத்த தலைவர் எச்.ராஜா












Click it and Unblock the Notifications