வேளாண் பட்ஜெட் பெயரில் பொய்.. பயிர்க்கடன் தள்ளுபடி இல்லையென அப்போவே சொன்னோம்.. விளாசிய அண்ணாமலை!
சென்னை: வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டுமாக ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது திமுக என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது சாகுபடி பரப்பளவு குறைந்திருப்பதாக கூறியுள்ள அண்ணாமலை, நெல்லுக்கு ரூ.2,500, கரும்புக்கு ரூ.4,000 குறைந்தபட்ச ஆதார விலை என்ற வாக்குறுதிகள் என்ன ஆனது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
2025-26ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி திமுக எம்எல்ஏ-க்கள் பச்சைத்துண்டு அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர். இதன்பின் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் உழவர் சந்தை மேம்படுத்துதல், விவசாயிகளுக்கான சுற்றுலா, இளைஞர்களுக்கான வேளாண் பயிற்சி, விவசாயிகளுக்கான கடன் வசதி, பூக்கள், பழங்கள் சாகுபடி அதிகரிப்பதற்கான திட்டங்கள், கால்நடை பராமரிப்பு, உழவர் நல சேவை மையம் என்று ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் தேசிய அளவில் வேளாண் துறையில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அண்ணாமலை விமர்சனம்
இந்த நிலையில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வேளாண் பட்ஜெட்டை காகித குவியல் என்று விமர்சித்துள்ளார். அதில், வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டுமாக ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது திமுக அரசு. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். திமுகவின் பட்ஜெட் மொத்தமுமே பொய்களும் புரட்டுகளுமாகத்தான் இருக்கிறது.
மக்கள் வரிப்பணம் வீண்
இந்தப் பொய்களைப் பொது இடங்களில் ஒளிபரப்பினால், மக்கள் வந்து பார்ப்பார்கள் என்று யார் இவர்களிடத்தில் கூறினார்கள் என்று தெரியவில்லை. இரண்டு நாட்களாக, மக்கள் வரிப்பணத்தை வீணடித்ததுதான் மிச்சம். கடந்த ஆண்டு வெளியிட்ட வேளாண் பட்ஜெட்டில், 2022 - 2023 ஆம் ஆண்டில், தமிழகத்தில் மொத்த சாகுபடிப் பரப்பு, 155 லட்சம் ஏக்கர் என்று கூறியிருந்தார்கள்.
சாகுபடி பரப்பளவு குறைவு
இந்த ஆண்டு பட்ஜெட்டில், அது, 151 லட்சம் ஏக்கராக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள். சாகுபடிப் பரப்பு, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 லட்சம் ஏக்கர் குறைந்திருக்கிறது என்பதுதான் உண்மை. ஆனால், அதை மறைக்க, நான்கு ஆண்டுகளுக்கு முன்புள்ள 2019 - 2020 சாகுபடிப் பரப்பை விட இந்த ஆண்டு உயர்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏன்?
பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்
தமிழக மக்களை எத்தனை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது திமுக? பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று கடந்த பிப்ரவரி மாதம் நாங்கள் கூறியபோது, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வந்து அம்புலிமாமா கதைகளைக் கூறிச் சென்றார்.
டேட்டா என்ன?
இன்றைய வேளாண் பட்ஜெட்டில், பயிர்க்கடன் ரூ.1,774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வெறும் பொய்யிலும் புரட்டிலும் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. திமுக அமைச்சர்களுக்கு, இப்படிக் கூசாமல் பொய் சொல்ல வெட்கமாகவே இருக்காதா?
வாக்குறுதி எங்கே போனது?
நெல்லுக்கு ரூ.2,500, கரும்புக்கு ரூ.4,000 குறைந்தபட்ச ஆதார விலை என்ற வாக்குறுதி எல்லாம் வெறும் பேச்சளவிலேயே போய்விட்டது. விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சித்து வருவதையே வேலையாக வைத்திருக்கும் திமுக அரசின் இந்த வேளாண் பட்ஜெட், வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications