சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரனுக்கு பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் பரபரப்பு கடிதம்
சென்னை: வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு படிவம் 6-ஐ வினியோகிப்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரனுக்கு, பா.ஜனதா மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் கடிதம் அனுப்பி உள்ளார். இதுகுறித்து விரைவில் தெளிவுபடுத்தாவிட்டால் அத்தகைய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு வாக்காளர்கள் சேர்ப்பு தொடர்பாக அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், "இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதியன்று வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலம் அடுத்த மாதம் (ஜனவரி) 18-ந்தேதி வரை நடைபெறும்.

இந்த ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், தகுதியுள்ள மக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 27-ந்தேதி (சனிக்கிழமை), 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), அடுத்த மாதம் 3-ந்தேதி (சனிக்கிழமை) மற்றும் 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
எனவே வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத குடிமக்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியுடைய குடிமக்கள் படிவம் 6-ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். மேலும், ஒரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எந்தவொரு வாக்காளரும், முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள பெயரை நீக்கம் செய்யவோ படிவம் 7 மூலம் விண்ணப்பிக்கலாம்.
முகவரி மாற்றுதல் மற்றும் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்யவும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்யவும், படிவம்-8 மூலம் விண்ணப்பிக்கலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரனுக்கு, பா.ஜனதா மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறுகையில்,"வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக கடந்த 19, 20 ஆகிய தேதிகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஏற்கனவே வாக்காளராக இருந்து 2025 சிறப்பு தீவிர திருத்த வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டுள்ள வாக்காளர்கள் படிவம் 6-ஐ பயன்படுத்துவது குறித்து சந்தேகம் எழுப்பினேன்.
ஏனெனில், படிவம் 6-ஐ புதிய வாக்காளர் மட்டுமே பயன்படுத்த முடியும். முந்தைய வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே வாக்காளராக இருந்த நபர் படிவம் 6-ஐ பயன்படுத்தி தங்களது பெயரை சேர்க்க விண்ணப்பித்தால் அது தண்டனைக்குரிய தவறான அறிவிப்பை செய்தவராக கருதப்படுவார்கள். இந்த பிரச்சனை குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் இந்திய தேர்தல் கமிஷனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தெளிவுபடுத்தப்படும் என கூறினார்.
மறுபுறம் தொகுதி தேர்தல் அலுவலர்கள், வாக்குச்சாவடி அதிகாரிகள் படிவம் 6-ஐ வினியோகித்து வருகிறார்கள். இப்படிவம் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதுவரை இந்த பிரச்சனை தெளிவுபடுத்தப்படவில்லை. எனவே, சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பின்னர் வெளியிடப்பட்டுள்ள வரைவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள் படிவம் 6-ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்க சிரமப்படுகிறார்கள்.
இதுகுறித்து விரைவில் தெளிவுபடுத்தாவிட்டால் அத்தகைய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள். ஒவ்வொரு குடிமகனையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது அரசியல் சாசன உரிமை என்பதால் விரைவில் தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications